2017-12-01 15:35:00

கர்தினால் பாட்ரிக் டிரொசாரியோ திருத்தந்தைக்கு நன்றியுரை


டிச.01,2017. திருத்தந்தையே, தாங்கள் பங்களாதேஷ் நாட்டை அன்புகூர்கின்றீர்கள். இந்த அன்பை பல வழிகளில் வெளிப்படுத்தியிருக்கின்றீர்கள். பங்களாதேஷ் முழு கிறிஸ்தவ சமூகமும், இவ்விடத்தில் கூடியிருக்கும் எல்லாரும் தங்களை மிகவும் அன்புகூர்கின்றார்கள். இப்பூமியில் பயணம் செய்யும் திருஅவையின் தலைவராகிய தாங்கள் நிறைவேற்றும் இத்திருப்பலியில் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு, தங்களின் அன்பையும், மகிழ்வையும் வெளிப்படுத்த இங்கு வந்துள்ளனர். திருப்பலி நிறைவேற்றப்பட்ட இந்த இடம், பல வழிகளில் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. நாட்டின் தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவர்கள், 1971ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி, பங்களாதேஷ் விடுதலைக்கு அழைப்பு விடுக்கும் உலகம் போற்றும் உரையை இவ்விடத்தில்தான் ஆற்றினார். இந்த இடத்தில் கிறிஸ்தவர்களாகிய நாங்கள் முதல்முறையாக திருப்பலி நிறைவேற்றினோம். இதன் வழியாக, இந்நாட்டில் திருஅவையின் சிறப்புப் பங்கை அடையாளப்படுத்தினோம். 1970ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், பங்களாதேஷில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டு, ஏறத்தாழ 30 இலட்சம் மக்களைப் பலிவாங்கிய புயலில் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்தார். புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களும் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டு, தங்களைப் போன்றே, புதிய அருள்பணியாளர்களுக்குத் திருப்பொழிவு செய்தார். திருத்தந்தையே, தங்களின் இத்திருத்தூதுப் பயணம், தலத்திருஅவைக்கும், நாடு முழுவதற்கும் ஆசீர்வாதங்களை நிரம்பக் கொண்டு வரும், நன்றி.

இவ்வாறு, டாக்கா பேராயர் கர்தினால் பாட்ரிக் டிரொசாரியோ அவர்கள், Suhrawardy Udyan பூங்காவில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியின் இறுதியில் நன்றியுரையாற்றினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.