2017-11-30 15:38:00

யாங்கூன் அமல அன்னை பேராலயத்தில் கர்தினால் போ நன்றியுரை


நவ.30,2017. நவம்பர் 30, இவ்வியாழன் காலையில், யாங்கூன் அமல அன்னை பேராலயத்தில், இளையோர்க்கு திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியின் இறுதியில், அந்நாட்டு கர்தினால் சார்லஸ் போ அவர்கள், நன்றியுரையாற்றினார். மியான்மாரில், அன்பு மற்றும் அமைதியின் புனித திருப்பயணம் இன்று நிறைவுக்கு வந்தாலும், அது நிறைவுறவில்லை. நம் அன்பு திருத்தந்தை, அன்பு மற்றும் அமைதிக்காக உழைக்கும் பணியை, இளையோரிடம் அளித்துள்ளார். இளையோராகிய நீங்கள் அனைவரும், அமைதிப் படையாக மாறுங்கள். திருத்தந்தை நிறைவேற்றிய இத்திருப்பலி, இத்திருத்தூதுப் பயணத்தின் நிறைவாக அமைந்துள்ளது. நம்பிக்கையை உருவாக்குவது திருஅவையின் பணி. நம் திருத்தந்தை, நம்பிக்கையின் திருத்தூதர். கடந்த மூன்று நாள்களாக, மியான்மார் நாடு, கிறிஸ்தவ நம்பிக்கையின் அருளில் மூழ்கியுள்ளது. திருத்தந்தையின் பிரசன்னம் இந்நாட்டிற்குக் குணப்படுத்துதலைக் கொண்டுவந்துள்ளது. இந்நேரத்தில், திருத்தந்தை நம் மத்தியில் இருக்கும் புதுமைக்காக, மியான்மார் திருஅவையின் சார்பில், ஆண்டவருக்கு நன்றி சொல்கிறேன். திருத்தந்தையே, தாங்கள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, தந்தையர்கள் ஒதுக்குப்புறமான மூலைக்குச் சென்று அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று சொன்னீர்கள். இப்போது, திருத்தந்தையாக, மிக ஒதுக்குப்பறங்களிலுள்ள கத்தோலிக்கச் சமூகங்களை ஆசீர்வதித்துள்ளீர். திருஅவை மீது தாங்கள் கொண்டிருக்கும் தந்தைக்குரிய அன்பால், நாங்கள் மிகவும் உள்ளம் உருகியுள்ளோம். இந்த நாட்டின் வரலாறு இன்றிலிருந்து ஆசீர்வதிக்கப்பட்டதாய் இருப்பதாக. ஏனென்றால், திருத்தந்தை, தனது பயணத்தால் இம்மண்ணை ஆசீர்வதித்துள்ளார். இவ்வாறு உரையாற்றினார் கர்தினால் போ. யாங்கூன் அமல அன்னை பேராலயம், மியான்மார் கத்தோலிக்கருக்கு மிகவும் முக்கியமானது. இப்பேராலயத்தின் கட்டுமான பணிகள் 1895ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, 1899ம் ஆண்டில் நிறைவடைந்தன. மிகவும் அழகான மற்றும் உறுதியான இந்தப் பேராலயம், 1930ம் ஆண்டு மே 5ம் தேதி நடந்த கடும் நிலநடுக்கத்தில் நிலைகுலையாது நின்றது. இரண்டாம் உலகப் போரில், ஜப்பானிய குண்டுகள் மழைக்கும் அது தப்பியது. ஆனால் 1944ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி கடுமையாய் சூறையாடப்பட்டு, மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அதன்பின்னர், 2008ம் ஆண்டு மே 2ம் தேதி, நார்சிஸ் கடும் புயலில் சேதம் அடைந்து மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.