2017-11-30 15:27:00

பங்களாதேஷ் குடியரசு, ஒரு கண்ணோட்டம்


நவ.30,2017. பங்களாதேஷ் குடியரசு, வங்காள நாடு எனவும் அழைக்கப்படுகின்றது. தெற்கு ஆசியாவிலுள்ள இந்நாடு, இந்தியாவையும், மியான்மாரையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. நேபாளம், பூட்டான், சீனா ஆகிய நாடுகள், பங்களாதேஷிற்கு அருகில் இருந்தாலும், அவை, அந்நாட்டின் எல்லைகளில் இல்லை. இந்நாட்டின் தலைநகரமான டாக்கா பெரிய நகரமாகவும் உள்ளது. கி.பி. ஆயிரமாம் ஆண்டுவாக்கில் அமைக்கப்பட்ட இந்நகரம், மொகாலயர்கள் ஆட்சி காலத்தில் ஜஹாங்கீர் நகர் என அழைக்கப்பட்டது. 1765ம் ஆண்டில், பிரித்தானியாவின் ஆதிக்கத்தின்கீழ் இந்நகர் வந்தது. பங்களாதேஷின் இரண்டாவது பெரிய நகரம் சிட்டகாங். இது அந்நாட்டின் பெரிய துறைமுக நகரமுமாகும். இந்நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியான வங்காள மொழியை, 98 விழுக்காட்டினர் பேசுகின்றனர். இது உலகில் மூன்றாவது பெரிய முஸ்லிம் நாடாகும். நீளமான டெல்ட்டா பகுதியையும், பல தீவுகளையும், பவளப் பாறைகளையும், 700 ஆறுகளையும், சுந்தரவனக் காடுகளையும் இந்நாடு கொண்டிருக்கின்றது. இக்காடுகள், உலகின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடுகளாகும். 1947 ஆண்டில் இந்தியா விடுதலை பெற்ற பின், இப்பகுதி கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் பாகிஸ்தான் நாட்டின் பகுதியாக‌ இருந்தது. பின் 1971ம் ஆண்டில், இந்தியாவின் உதவியுடன், வங்காள விடுதலைப் போருக்குப்பின், தனி சுதந்திர நாடானது. 135 இனத்தவர் இந்நாட்டில் வாழ்கின்றனர். 89.1 விழுக்காட்டினர் முஸ்லிம்கள். 10 விழுக்காட்டினர் இந்துக்கள். புத்த மற்றும் கிறிஸ்தவர்கள் 0.9 விழுக்காட்டினர். 16ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசிய வர்த்தகத்துடன், கிறிஸ்தவமும் இப்பகுதியில் பரவியது. 1972ம் ஆண்டில் பங்களாதேஷ் காரித்தாஸ் உருவாக்கப்பட்டது. 1973ம் ஆண்டில் திருப்பீடத்துடன் தூதரக உறவுகள் தொடங்கின. 1970ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 6ம் பவுல் அவர்களும், 1986ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களும் பங்களாதேஷில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.