2017-11-29 13:26:00

திருத்தந்தையின் மறையுரை - பழிதீர்ப்பது இயேசுவின் வழி அல்ல!


நவ.29,2017. அன்பு சகோதர, சகோதரிகளே, இந்தத் திருப்பலியில் கலந்துகொள்ள உங்களில் பலர் மலைகள் சூழ்ந்த இடங்களிலிருந்து நடைப்பயணமாக இங்கு வந்துள்ளீர்கள். நான் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும், நம்பிக்கையும், ஆறுதலும் தரும் சொற்களை உங்களுக்கு வழங்கவும் வந்துள்ளேன்.

பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றால் ஆன தெய்வங்களை மக்கள் புகழ்ந்தனர் என்று, தானியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகத்தில் வாசித்தோம். ஆனால், இறைவாக்கினரான தானியேல் மட்டுமே உண்மை இறைவனின் ஞானத்தை விளக்க முடிந்தது.

இறைவனின் மறையுண்மைகளை விளக்கியதில் தலைசிறந்தவர், இயேசு. அவர், இறைவனின் ஞானத்தை, நீண்ட உரைகளால் விளக்கவில்லை; மாறாக, தன் உயிரை சிலுவையில் கையளித்ததன் வழியே விளக்கினார். சிலுவையில் இயேசு அடைந்த காயங்கள் வழியே, நமது காயங்கள் குணமாகின்றன. வன்முறைகளால், மியான்மார் நாட்டு மக்கள் காயமடைந்துள்ளனர். காயத்தை குணமாக்க, கோபமும், பழிதீர்ப்பதும் பதில்களென உலகம் சொல்லித்தருகிறது. ஆனால், பழிதீர்ப்பது, இயேசுவின் வழி அல்ல!

இயேசுவின் வழி முற்றிலும் மாறுபட்டது. வெறுப்பும், புறக்கணிப்பும், அவரை, சிலுவை மரணத்திற்கு நடத்திச் சென்றபோதிலும், மன்னிப்பாலும், பரிவாலும் பதிலளித்தார் இயேசு. நாமும் புறக்கணிப்பையும், தடைகளையும் சந்திக்கும்போது, அவர் நமக்கு ஞானத்தை, அதாவது, தூய ஆவியாரைத் தருவதாக வாக்களித்ததை, இன்றைய நற்செய்தியில் காண்கிறோம் (லூக்கா 21:15) இவ்வுலகின் ஞானத்தை வெல்லும் இயேசுவின் ஆவி, நமது காயங்களிலிருந்து குணமும் தருகிறது.

தன் பாடுகளுக்கு முந்திய இரவு, இயேசு, தன்னையே, அப்ப, இரச வடிவில், சீடர்களிடம் வழங்கினார். அவரது உடலையும், இரத்தத்தையும் கண்டுணர்வது மட்டும், நாம், திருப்பலி வழியே பெறும் கொடை அல்ல; மாறாக, அவரது காயங்களில் நாம் அடைக்கலம் பெறுவதும், திருப்பலி வழங்கும் கொடை.

மியான்மார் தலத்திருஅவை இந்நாட்டின் காயங்களைக் குணமாக்க பெரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. உங்களுடைய வறுமை, இன்னல்கள் நடுவில், அடுத்தவரின் வறுமையை, துயரை நீக்க, நீங்கள் உழைத்து வருகிறீர்கள்.

கத்தோலிக்க கருணா மியான்மார் அமைப்பின் வழியாகவும், பாப்பிறை மறைப்பணி அமைப்புக்கள் வழியாகவும், இந்நாட்டில் பலருக்கு உதவிகள் செய்கின்றீர்கள். இறைவனின் அன்பை மற்றவரோடு பகிர்ந்துகொள்வதைத் தொடர்ந்து செய்யுங்கள். இயேசு, உங்களை, காயங்களிலிருந்து குணமாக்கி, குடும்பங்களில் ஒப்புரவை உருவாக்கி, உங்கள் முயற்சிகளுக்கு தகுந்த பலனளிப்பார்.

இயேசு தரும் மன்னிப்பு, கருணை என்ற செய்திகளை புரிந்துகொள்ள விருப்பமில்லாதவர்கள் பலர் உள்ளனர். எனினும், சிலுவையில் வெளிப்பட்ட அவரது அன்பை, யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது.

தன் மகனைப் பின்தொடர்ந்து, கல்வாரி மலையுச்சி வரை சென்ற நமது மரியன்னை, இவ்வுலகப் பயணத்தில் நம்முடன் துணை வருகிறார். அவர், தன் மகனிடமிருந்து, நமக்கு உண்மையான ஞானத்தை, பரிவுள்ள உள்ளத்தை, பெற்றுத் தருவாராக!

இறைவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக! மியான்மார் திருஅவையை இறைவன் ஆசீர்வதிப்பாராக! இந்த நாட்டை, தன் அமைதியால் இறைவன் நிரப்புவாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.