2017-11-28 12:44:00

மியான்மார் அரசு அதிகாரிகளுக்கு திருத்தந்தை வழங்கிய உரை


நவ.28,2017. அரசு ஆலோசகரான பெண்மணியே, அரசு அதிகாரிகளே, ஏனைய நாட்டுத் தூதர்களே, பெரியோரே, பெண்மணிகளே, இந்நாட்டில், மிகச் சிறிய அளவில், அதே வேளை, பக்தி நிறைந்தவர்களாய் வாழும் கத்தோலிக்கர்களுடன் செபிக்கவும், அவர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தவும் நான் இங்கு வந்துள்ளேன். மியான்மார் நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே தூதரக உறவுகள் உருவாக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே நான் இங்கு வந்துள்ளது குறித்து மகிழ்கிறேன்.

மியான்மாரில் நீதியான, ஒப்புரவான, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்க விழையும் அனைவருக்கும், என்னுடைய பயணத்தின் வழியே ஊக்கமளிக்க விரும்புகிறேன். இயற்கை வளங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட மியான்மாரில், அதன் மக்களே இந்நாட்டின் மிகப்பெரிய கருவூலம். அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் முயற்சிகளில், கடந்தகாலக் காயங்களை ஆற்றுவதை, முதன்மையான முயற்சியாக நீங்கள் மேற்கொண்டு வருவதை நான் பாராட்டுகிறேன். நீதியை நிலைநாட்டுதல், மனித உரிமைகளை மதித்தல் ஆகியவற்றின் வழியே, ஒப்புரவையும், அமைதியையும் கட்டியெழுப்பமுடியும்.

உண்மையான, நீடித்த அமைதியின் அடித்தளமாக, அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்க வழிசெய்யும் நீதி அமைந்துள்ளது. இரண்டு உலகப்போர்களின் கொடுமைகள் இந்த எண்ணத்தை உறுதி செய்கின்றன. இதன் பயனாக, ஐக்கிய நாடுகள் அவையும், மனித உரிமைகளின் அனைத்துலக அறிக்கையும் உருவாயின.

அமைதி, மியான்மாரின் எதிர்காலமாக அமையவேண்டும். மற்றவர்களையும், அவர்களுக்குரிய உரிமைகளையும் மதிப்பதில் இந்த அமைதி அடங்கியுள்ளது.

தேசிய ஒப்புரவிலும், ஒருங்கிணைப்பிலும் மியான்மார் நாட்டின் அனைத்து மதங்களும் முக்கிய பணியாற்றவேண்டும். மதங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள், நம்மைப் பிரிப்பதற்குப் பதில், ஒருங்கிணைப்பதற்கு உதவவேண்டும். மனதளவிலும், ஆன்மீக அளவிலும் காயப்பட்டவர்களைக் குணமாக்க, மதங்கள் பெரும் பங்காற்றமுடியும். இந்நாட்டில் உள்ள சமயத் தலைவர்கள் பலரும் இணைந்து மேற்கொண்டுவரும் அமைதி முயற்சிகள், பெரும் நம்பிக்கை தரும் அடையாளங்கள்.

இந்நாட்டின் வருங்காலம், இளையோர் கரங்களில் உள்ளது. தரமான கல்வி, தகுதியான வேலைவாய்ப்பு ஆகியவற்றின் வழியே, இளையோரை ஊக்குவிப்பது, தலைசிறந்த முதலீடு. இளையோரை பல்வேறு தொழில்நுட்பங்களில் பயிற்றுவிக்கும் வேளையில், நேர்மை, மனித நேயம் ஆகிய நன்னெறி விழுமியங்களிலும் அவர்களைப் பயிற்றுவிக்கவேண்டும்.

வருங்காலத்தைக் குறித்த நம்பிக்கை, இளையோர் உள்ளங்களிலிருந்து திருடப்படாமல் காப்பது அவசியம். அந்த நம்பிக்கையே, இந்நாட்டின், இன்னும் சொல்லப்போனால், ஒட்டுமொத்த மனித குடும்பத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும்.

அரசு ஆலோசகரான பெண்மணியே, நண்பர்களே,

என் பயண நாட்களில், கத்தோலிக்கர்களை, அவர்களது நம்பிக்கையில் தளராதவண்ணம் உற்சாகப்படுத்த விரும்புகிறேன். அவர்கள் ஆற்றும் மனிதாபிமான, பிறரன்புப் பணிகள் வழியே, ஒப்புரவு, உடன்பிறந்த உணர்வு என்ற நற்செய்தி இந்நாட்டில் பரவட்டும்.

ஏனைய மதத்தினரோடும், நல்மனம் கொண்ட அனைவரோடும் இணைந்து, அன்புக்குரிய இந்நாட்டில், முன்னேற்றம் நிறைந்த புது யுகத்தை அனைவரும் உருவாக்குவார்களாக!

ஞானம், சக்தி, அமைதி அனைத்தையும் வழங்கும் இறைவனின் ஆசீர் உங்கள் மீது தங்குவதாக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.