2017-11-27 14:43:00

தினமும் பல்வேறு வடிவங்களில் நம்மிடம் வரும் இறைவன்


நவ.27,2017. இன்று இயேசு நமக்கு அரசராக, மேய்ப்பராக, நீதிபதியாக விளங்குகிறார்; இறையரசில் இணைவதற்கு உகந்த தகுதியை நமக்குக் காட்டுகிறார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நவம்பர் 26 இஞ்ஞாயிறன்று வழங்கிய நண்பகல் மூவேளை செப உரையில் கூறினார்.

இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட கிறிஸ்து அரசர் பெருவிழாவையொட்டி, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த 30,000த்திற்கும் அதிகமான திருப்பயணிகளிடம், இந்த ஞாயிறு திருப்பலியில் வாசிக்கப்பட்ட நற்செய்தியை மையப்படுத்தி மூவேளை செப உரை வழங்கினார் திருத்தந்தை.

பசித்திருப்போர், தாகமாயிருப்போர், ஆடையின்றி இருப்போர் என, தேவைகளில் துன்புறும் உடன்பிறந்தோருக்கு நாம் செய்யும் உதவிகளே, இறுதித் தீர்வை நேரத்தில், அளவுகோலாக அமைகின்றன என்று, திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

உலகின் இறுதியில், இயேசு, அனைத்து நாடுகளையும் தீர்ப்பிட வருவார், ஆனால், அவர் ஒவ்வொரு நாளும் பல்வேறு வடிவங்களில் நம்மிடம் வருகிறார், அவரை வரவேற்க வேண்டுமென்று விரும்புகிறார் என்று தன் உரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவை, தன் வாழ்வில் வரவேற்ற மரியன்னை, அவரை அடையாளம் காணவும், வரவேற்கவும் நமக்கு உதவுவாராக என்று தன் மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.