2017-11-25 15:41:00

குஜராத் தேர்தல்களில் நல்ல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட...


நவ.25,2017. இந்தியாவில் சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் பாதுகாப்பற்ற உணர்வு வளர்ந்துவரும் இவ்வேளையில், குஜராத் மாநிலத்தில், வருகின்ற டிசம்பரில் நடைபெறும் தேர்தல்களில், நல்ல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட செபிக்குமாறு, கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார், அம்மாநில கத்தோலிக்க அதிகாரி ஒருவர்.

குஜராத்தில், வருகின்ற டிசம்பர் 9, 14 ஆகிய நாள்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறவிருப்பதை முன்னிட்டு மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள, காந்திநகர் பேராயர் Thomas Macwan அவர்கள், கத்தோலிக்கர் தங்கள் மனச்சான்றின்படி வாக்களிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

குறுகிய எண்ணம் கொண்டுள்ள மக்களுக்கு எதிராக நாம் இருக்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ள பேராயர் Macwan அவர்கள், தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுமாறும், நல்ல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்குச் செபிக்குமாறும் கூறியுள்ளார்.

குறிப்பாக, தனியாகவும், குடும்பமாகவும், குழுவாகவும், பங்குத் தளங்களிலும் செபமாலை செபிப்பது பெரும் உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ள பேராயர் Macwan அவர்கள், குஜராத் மாநிலத்திலுள்ள ஆயர்கள் எல்லாருமே, தேர்தலுக்காக, எல்லா இடங்களிலும் செப வழிபாடுகளை நடத்துமாறு விரும்புகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் தேர்தல் முடிவுகள், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், இம்முடிவுகள் நம் அன்புக்குரிய நாட்டின் எதிர்காலத்தில் நேர்மறை மற்றும் எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும், பேராயரின் அறிக்கை கூறுகின்றது. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.