2017-11-23 15:19:00

துன்புறும் கிறிஸ்தவர்கள் குறித்து இணை அறிக்கை


நவ.23,2017. நம் சகோதர சகோதரிகள் துன்புறுவதைக் கண்டு நாம் அக்கறையின்றி இருக்கமுடியாது; ஏனெனில், “ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன்புறும். ஓர் உறுப்பு பெருமை பெற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து மகிழ்ச்சியுறும்” (1 கொரிந்தியர் 12:26) என்று, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை, கிரில் அவர்களும், ஆங்கிலிக்கன் சபையின் தலைவர் பேராயர் ஜஸ்டின் வெல்பி அவர்களும் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

உலகின் பல நாடுகளில், குறிப்பாக, மத்தியக் கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவர்கள் அடைந்துவரும் துன்பங்கள் குறித்து தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள இவ்விரு தலைவர்களும், போரின் கொடுமைகளால் அனைத்தையும் இழந்துள்ள கிறிஸ்தவர்கள், தங்கள் வாழ்வைக் கட்டியெழுப்ப, அவர்களுக்கு உதவ வேண்டுமென்ற அழைப்பை விடுத்துள்ளனர்.

கிறிஸ்தவ சபைகளுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள், நம் ஒருமித்த முயற்சிகளுக்கு தடையாக உள்ளன என்பதை, தங்கள் அறிக்கையில் கூறியுள்ள இவ்விரு தலைவர்கள், கிறிஸ்தவ நம்பிக்கை, மனிதாபிமானம் என்ற இரு கண்ணோட்டம் நம் வேறுபாடுகளை நீக்கவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்.

உலகெங்கும் கிறிஸ்தவர்கள் சந்திக்கும் வன்முறைகளை அடையாளப்படுத்த, நவம்பர் 22, இப்புதனன்று, மாலை 6 மணி முதல், இலண்டன் மாநகரின் பாராளுமன்றம், வெஸ்ட்மின்ஸ்டரில் அமைந்துள்ள, ஆங்கிலிக்கன் மற்றும் கத்தோலிக்க பேராலயங்கள், மற்றும் சில முக்கியத் தலங்கள் சிவப்பு நிறத்தில் ஒளியேற்றப்பட்டிருந்தன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.