2017-11-22 15:38:00

பாசமுள்ள பார்வையில்…..........., : குற்றமற்ற அபலையின் சாபம்


தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள நிலப்பரப்பில் செம்மண் நிறைந்த பகுதியாக, பாலைவனம்போல் உள்ளது, தேரிக்காடு.‘இடையர் சமூகத்தைச் சேர்ந்த விதவை ஒருத்தியின் சாபத்தால்தான் மானவீரவள நாடு, மண்மாரி பெய்து, தேரிக்காடாக மாறியது.’ என்கின்றனர்.

மானவீரவளநாடு என சிறப்புடன் விளங்கிய அந்நாட்டின் பொதுமக்களுக்குக் குடி தண்ணீர் வழங்கிய கிணறு ஒன்று ஊரின் புறத்தே இருந்தது. கிணற்றுக்கு அருகில் ஒரு மாமரம் இருந்தது. மிகவும் விசேடமான மாமரம் அது. ஆண்டுக்கு ஒரு முறை ஒரே ஒரு காய்தான் காய்க்கும். அது கனிந்தவுடன் அதனைப் பறித்துச் சென்று சேவகர்கள் பாதுகாப்பாக மன்னனிடம் சேர்த்துவிடுவார்கள். அந்த ஆண்டிலும் மாமரத்தில் ஒற்றை மாங்காய் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்தது. மாமரத்துக்கு மன்னனுடைய சேவகர்கள் காவல் காத்து நின்றனர்.

அந்த ஊரில் இடைச்சாதிப் பெண்ணொருத்தியும் இருந்தார். விதவை; தனியாக வசித்து வந்தார். அன்று வழக்கம்போல் அதிகாலை வேளையில் குடி தண்ணீர் எடுப்பதற்காகக் கிணற்றடிக்குப் போனார். பனை ஓலைப் பட்டையைக் கிணற்றில் விட்டுத் தண்ணீர் கோரி, தான் எடுத்து வந்த குடத்தில் ஊற்றிக் கொண்டார். அவர் தண்ணீர் எடுப்பதற்கு முன்னரே மாமரத்திலிருந்த அந்த ஒற்றை மாங்கனி கிணற்றுக்குள் விழுந்திருந்தது. அவர் தண்ணீர் எடுக்கும்போது அக்கனி அவர் அறியாமலேயே பனை ஓலைப்பட்டைக்குள் புகுந்ததோடு அல்லாமல், அத்தண்ணீரைத் தனது குடத்திற்கு மாற்றும்போது தண்ணீரோடு சேர்ந்து குடத்திற்குள் விழுந்துவிட்டது.

விடிந்ததும் காவலுக்கு வந்த சேவகர்கள், மாமரத்தில் இருந்த மாங்கனி காணாமற் போயிருந்ததை அறிந்து பதைபதைத்துப் போனார்கள். சேவகர்கள் வீடு வீடாகப் போய்த் தேடினார்கள். அந்த விதவையின் வீட்டில் சோதனையிட்டபோது, குடி தண்ணீர்க் குடத்தில் மாங்கனி இருந்ததைச் சேவகர்கள் கண்டுபிடித்தனர். மன்னரின் கட்டளைப்படி, அவரை நிற்க வைத்து உடல் முழுவதும் வைக்கோற்பிரியைச் சுற்றினார்கள். ஊர்கூடி வேடிக்கை பார்த்தது. வைக்கோற்பிரி சுற்றப்பட்ட உடலோடு நின்றிருந்த அந்த அபலைக்கு ஒருவன் தீ வைத்தான். “எந்த பாவமும் அறியாத என்மேல் அபாண்டமாகக் குற்றம் சுமத்தி, என்னைக் கொன்னவங்க எல்லோருக்கும் குடி அற்றுப் போவணும். நீதி தவறிய இந்த மன்னனுடைய நாடு, மண்மாரி பெய்து மண்மேடு ஆவணும்...” என்று சாபம் விட்டவாறு அவர் எரிந்து கீழே சரிந்தார். அவள் சாபம் பொய்த்துப் போய்விடவில்லை. எங்கும் காணாத அதிசயமாக அந்நாட்டில் தொடர்ந்து மண்மாரி பெய்தது. விரைவில் அந்நாட்டின் பெரும்பகுதி மணல் சூழ்ந்து அழிந்து போயிற்று. எல்லோரும் அழிந்து போயினர். குற்றமற்ற ஒரு பெண்ணின் சாபத்தின் வலிமை குறித்து இப்படி ஒரு கதை, காலம் காலமாக அப்பகுதியில் நிலவுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.