2017-11-22 15:20:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : பொதுச்சங்கங்கள் பாகம் 2


நவ.22,2017.  கிறிஸ்தவம், தொடக்க காலத்திலிருந்தே, பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில், தளராமல் செழித்து வளர்ந்து வருகிறது. கி.பி.318ம் ஆண்டில், ஆரியுஸ் என்ற கத்தோலிக்க அருள்பணியாளர், கிறிஸ்துவின் முழு இறையியல்பை மறுத்து, வெளிப்படையாகப் போதிக்கத் தொடங்கினார். அதோடு இவரது ஆயரான அலெக்சாந்திரியாவின் ஆயர் அலெக்சாந்தர் மற்றும், அலெக்சாந்திரியா ஆசிரியர்களையும், கிறிஸ்து இயல் கோட்பாடு குறித்து சவால்விட்டார். இந்தப் பிரச்சனை ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு நீடித்தது. ஆரியுசை ஆதரித்தும், அவருக்கு எதிராகவுமென திருஅவையில் இரு குழுக்கள் உருவாகின. ஆயர் அலெக்சாந்தர் அவர்கள், ஆரியுசுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தீவிரம் காட்டவில்லை. இப்பிரச்சனை, திருஅவையின் அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறியதை உணர்ந்த பின்னரே, இவர், ஆயர்கள் அவையைக் கூட்டி ஆலோசனை கேட்டார். இந்த அவை ஆரியுசுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியதால், ஆயர் அலெக்சாந்தர், ஆரியுசை பணி நீக்கம் செய்து, அவரையும், அவரின் ஆதரவாளர்களையும் திருஅவையிலிருந்து விலக்கினார். ஆரியுஸ் பணிநீக்கம் செய்யப்பட்ட சமயத்தில், அவரின் கோட்பாடுகள், அலெக்சாந்திரியா மறைமாவட்டத்தையும் தாண்டி, மற்ற இடங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம், திருஅவை முழுவதிலுமே முக்கிய விவாதப்பொருளாக இருந்துவந்தது.

அதேநேரம், கி.பி.313ம் ஆண்டில் கையெழுத்தான மிலான் அறிக்கை வழியாக, திருஅவை உரோமைப் பேரரசில் வல்லமைமிக்க சக்தியாகவும் மாறியிருந்தது. இதனால் உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்ட்டைன் அவர்களே, இப்பிரச்சனைக்குத் தீர்வு காண முயற்சி எடுத்தார். துருக்கி நாட்டிலுள்ள பழம்பெருமை வாய்ந்த நீசேயா நகரில், பொதுச் சங்கம் ஒன்றையும் கூட்டினார். இப்பொதுச் சங்கத்திற்கு, தனது பேரரசின் அனைத்து மறைமாவட்டங்களும் ஒன்று அல்லது இரண்டு பிரதிநிதிகளை அனுப்புமாறு ஆணையிட்டார் பேரரசர். கிழக்குப் பகுதியிலிருந்து பெரும்பாலான ஆயர்கள் இதில் கலந்துகொண்டனர். திருத்தந்தை முதலாம் சில்வெஸ்டர், முதிர்ந்த வயது காரணமாக இதில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் இரு அருள்பணியாளர்களை, தனது பிரதிநிதிகளாக அனுப்பி வைத்தார். ஆரியுசும் இதில் கலந்துகொண்டார். ஆனால் ஆயர் அலெக்சாந்தர் இதில் கலந்துகொள்ளாமல், தனது பிரதிநிதியாக, 21 வயது இளம் திருத்தொண்டர் அத்தனாசியுசை, தனக்குப் பதிலாக அனுப்பி வைத்தார். இப்பொதுச் சங்கத்திற்கு பேரரசரே தலைமை வகித்து, சில கலந்துரையாடல்களை வழிநடத்தினார். மூவொரு கடவுள் பற்றி அத்தனாசியுஸ் பேசியது, அச்சங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. திருப்பலிகளில் சொல்லப்படும் விசுவாச அறிக்கையும் வகுக்கப்பட்டு, பெரும்பாலான ஆயர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆரியுசும், அவரின் இரு ஆதரவாளர்களான, Theonas, Secundus ஆகியோரும், Illyricumக்கு நாடு கடத்தப்படுகின்றனர் என்று, கி.பி.325ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி, பேரரசர், அலெக்சாந்திரியா மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து திருஅவைகளுக்கும் அறிக்கை அனுப்பினார். ஆயினும், பின்னாளில், ஆரியுஸ் தப்பறைக் கோட்பாட்டைப் பின்பற்றியவர்கள் அரசியலில் வலிமை பெற்று, அத்தனாசியுசை அழிக்க முயற்சி செய்தனர். ஆரியுசை மீண்டும் திருஅவைக்குள் சேர்ப்பதற்கு கான்ஸ்ட்டைன் இட்ட ஆணையை அத்தனாசியுஸ் ஏற்க மறுத்தார். அதோடு அத்தானாசியுசின் பகைவர்கள், அவருக்கு எதிராக எல்லா வகையான குற்றங்களையும் சுமத்தினர். முதலில் Meletian ஆயர் Arseniusஐக் கொலை செய்தார் என, அவர்மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டது. இரண்டாவதாக, அரசியல் தொடர்புடைய குற்றம் சுமத்தப்பட்டது. அதாவது அலெக்சாந்திரியாவுக்கு சோளம் கொண்டுவந்த கப்பலை தடைசெய்வதாக இவர் அச்சுறுத்தினார் என்று கூறினர். மூன்றாவதாக, ஓர் அருள்பணியாளரை இவர் தாக்கியதாகக் குற்றம் சுமத்தினர். இறுதியில் நிக்கோமேதியாவின் யுசேபியுசின் செல்வாக்கால் ஆயர்கள் அத்தனாசியுசை Trierக்கு நாடு கடத்தி, ஆரியுசை திருஅவையில் சேர்த்து, அவரை அருள்பணியாளராகவும் அங்கீகரித்தனர். எனவே, புனித அத்தனாசியுஸ் தனது வாழ்வின் பெரும் பகுதியை, ஆரியுஸ் தவறான கோட்பாடுகளுக்கு எதிராகப் போராடுவதிலேயே செலவழிக்க வேண்டியிருந்தது. அத்தனாசியுஸ் அவர்கள், கிறிஸ்துவின் மீது ஆழ்ந்த பற்றும், நம்பிக்கையும் கொண்டு வாழ்ந்தார். தன்னைத் துன்புறுத்தியவர்களின் மீது சிறிதும் காழ்ப்புணர்ச்சி கொள்ளவில்லை. தன்மீது கடுமையாகக் குற்றம் சாட்டியவர்களையும் பொறுமையோடு ஏற்று அன்பு செய்தார். இவர் ஒரு சிறந்த இறையியலாளர். இவர், நான்காம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க எகிப்தியத் தலைவராக, திருஅவையின் தூணாகவும், நான்கு மாபெரும் கீழை திருஅவைத் தந்தையர்களில் ஒருவராகவும் போற்றப்படுகிறார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.