2017-11-21 15:01:00

கிறிஸ்துவின் ஒப்புரவு, அமைதிச் செய்தியை அறிவிக்க வருகிறேன்


நவ.21,2017. இயேசு கிறிஸ்துவின் ஒப்புரவு, மன்னிப்பு மற்றும் அமைதிச் செய்தியை அறிவிப்பதற்கு, அவரின் நற்செய்திப் பணியாளராக, உங்கள் நாட்டிற்கு வருகை தருகிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பங்களாதேஷ் நாட்டிற்கு காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

இம்மாதம் 30ம் தேதி முதல், டிசம்பர் 2ம் தேதி வரை பங்களாதேஷ் நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு மக்களுக்கு, இச்செவ்வாயன்று அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில், இப்பயண நாள்கள், நாட்டினர் எல்லாருக்கும் நம்பிக்கை மற்றும் உற்சாகத்தைத் தருவதாய் அமையுமாறு செபிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இப்பயணம், பங்களாதேஷ் கத்தோலிக்க சமுதாயத்தின் விசுவாச மற்றும் நற்செய்திக்குச் சான்று பகரும் வாழ்வை உறுதிப்படுத்தும் நோக்கத்தையும் கொண்டிருக்கின்றது என்று அச்செய்தியில் பேசியுள்ள திருத்தந்தை, ஒவ்வொரு மனிதரின் மாண்பைப் போதித்து, மற்றவர்க்கு, குறிப்பாக, ஏழைகள் மற்றும் தேவையில் இருப்போருக்கு நம் இதயங்களைத் திறப்பதற்கு நற்செய்தி அழைப்பு விடுக்கின்றது என்றும் கூறியுள்ளார்.

அதேநேரம், பங்களாதேஷ் மக்கள் அனைவரையும், சிறப்பாக, Ramnaவில் சமயத் தலைவர்களைச் சந்திக்கும் நேரத்திற்காகவும் ஆவலாய்க் காத்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒரே மனிதக் குடும்பத்தின் உறுப்பினர்கள் என்ற முறையில், ஒருவர் ஒருவரைப் புரிந்துகொள்வதிலும், மதிப்பதிலும், ஆதரவளிப்பதிலும் ஊக்கப்படுத்த வேண்டுமென்ற உணர்வு, ஒவ்வோர் இடத்திலும், மத நம்பிக்கையாளர்கள் மற்றும், நல்மனம் கொண்டவர்கள் மத்தியில் நிலவிவரும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார். 

பங்களாதேஷில், இப்பயணத் தயாரிப்புப் பணிகளில் பலர் ஈடுபட்டுள்ளதை அறிவேன், அவர்கள் எல்லாருக்கும் தனது நன்றியைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நீங்களும், உங்கள் குடும்பங்களும் மகிழ்விலும் அமைதியிலும் வாழ்வதற்காகச் செபிக்கின்றேன், விரைவில் சந்திப்போம் என்று, இக்காணொளி செய்தியை நிறைவு செய்துள்ளார்.

இம்மாதம் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை மியான்மார் நாட்டிலும், பின்னர், டிசம்பர் 2ம் தேதி வரை பங்களாதேஷ் நாட்டிலும் திருத்தூதுப் பயண நிகழ்வுகளை நிறைவேற்றவுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். இப்பயணம் ஆசியாவுக்கான அவரின் 3வது பயணமாகவும், 21வது வெளிநாட்டுப் பயணமாகவும் அமைகின்றது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.