2017-11-21 14:51:00

கருத்தியல் ஆதிக்கம் வேறுபாடுகளைச் சகித்துக்கொள்வதில்லை


நவ.21,2017. கலாச்சார மற்றும் கருத்தியல் ஆதிக்கம், வேறுபாடுகளைச் சகித்துக்கொள்வதில்லை, அதேநேரம், இது, மத நம்பிக்கையாளர்களை வதைக்கின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று கூறினார்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில், இச்செவ்வாய் காலை நிறைவேற்றிய திருப்பலியின் முதல் வாசகமான, 2ம் மக்கபேயர் நூல், பிரிவு ஆறிலிருந்து (2மக்.6,18-31) மறையுரைச் சிந்தனைகளை வழங்கியத் திருத்தந்தை, எலயாசரின் மறைசாட்சி இறப்பை மையப்படுத்திப் பேசினார்.

மூன்று வகையான துன்புறுத்தல்கள் பற்றி விளக்கிய திருத்தந்தை, ஒன்று, மதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது, இரண்டாவது, அரசியலையும், மதத்தையும் அடிப்படையாகக் கொண்டது, எடுத்துக்காட்டாக, முப்பது ஆண்டுகள் சண்டை அல்லது புனித பர்த்தலமேயோவின் இரவு, மூன்றாவது முற்றிலும் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது என்று விளக்கினார்.

மரபுகளையும், வரலாறையும், ஒரு சமுதாயத்தின் மதத்தையும் தூய்மைப்படுத்தும் ஒரு புதிய கலாச்சாரம் வருகையில், அது சகிப்பற்றதன்மையால் துன்புறுத்தப்படுகிறது, எலயாசரின் மறைசாட்சி மரணத்திலும் இதையே காண்கிறோம், இவர் கடவுளுக்கு விசுவாசமாக இருந்ததால் மரணத்திற்குத் தீர்ப்பிடப்பட்டார் என்றும், மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகப்போக்குமிக்க பழக்கவழக்கங்கள் இறை மக்களில் வளர்வதற்குத் திணிக்கப்படும் ஒரு விபரீதப் போக்கை, கலாச்சார ஆதிக்கம் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, இந்த ஆதிக்கப் போக்கு, இறுதியில், மத நம்பிக்கையாளர்களைத் துன்புறுத்துவதில் கொண்டுபோய் முடிகின்றது என்றும் கூறினார்.

கலாச்சார ஆதிக்கத்திற்கு, நாம் கடந்த நூற்றாண்டில் இடம்பெற்ற படுகொலைகளை நினைத்துப் பார்க்கலாம் என்றும், இதில், எல்லாரும் சமம், வேறுபாடுகளுக்கும், கடவுளுக்கும் அங்கே இடமில்லை என்ற நிலை இருந்தது என்றும் கூறினார் திருத்தந்தை. எலயாசர் இறக்கும்வேளையில் இளையோரை நினைத்துப் பார்த்தார், இறையன்புக்காகவும், வருங்காலத்தில் வேரூன்றப்பட்ட சட்டத்திற்காகவும் தன் உயிரைக் கையளித்தார் என்று மறையுரையாற்றிய திருத்தந்தை, மாற்றுச் சிந்தனை உள்ளவர்களுடன் கலந்துரையாடல் நடத்த வேண்டியதன் அவசியத்தையும் எலயாசர் உணர்த்திச் சென்றார் என்று கூறினார்.

நம்முன்னால் பரிந்துரைக்கப்படும் கலாச்சார மற்றும் ஆன்மீக ஆதிக்கத்தின் மத்தியில் நாம் எதிர்கொள்ளும் குழப்பமான தருணங்களில் தெளிவுபெற, எலயாசரின் எடுத்துக்காட்டான வாழ்வு உதவுவதாக என்று கூறி, மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.        

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.