2017-11-20 16:16:00

பாராமுகமாக இருப்பதே, வறியோருக்கு எதிரான பெரும் பாவம்


நவ.20,2017. உதவி தேவைப்படும் நிலையிலுள்ள நம் சகோதர, சகோதரிகள் குறித்து பாராமுகமாக இருப்பதே, வறியோருக்கு எதிரான மிகப்பெரும் பாவம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று தன் மறையுரையில் கூறினார்.

முதல் உலக வறியோர் நாளை முன்னிட்டு உரோம் நகர் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் 6000க்கும் அதிகமாக ஏழைகள் குழுமியிருக்க, அவர்களுக்கு திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தீமையைக் குறித்த கவலை அதிகரித்துவரும் அதே வேளை, அது குறித்து எதுவும் செய்யாமல், பாராமுகமாக இருக்கும் நிலையும் அதிகரித்து வருகிறது என்று கூறினார்.

வறியோருக்கு உதவ வேண்டியது, திருஅவையின் நற்செய்தி கடமையாகிறது, ஏனெனில், அவர்களே திருஅவையின் உண்மையான செல்வங்கள் எனவும் தன் மறையுரையில் எடுத்துரைத்தத் திருத்தந்தை, இந்நாளின் நற்செய்தி வாசகம் எடுத்துரைத்த தாலந்து உவமையுடன் ஏழைகள் மீது நாம் காட்டும் அக்கறையைத் தொடர்பு படுத்தி கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஒவ்வொருவரும் சமூகத்தில் பயனுடையவர்களே, ஏனெனில், ஒவ்வொருவருக்கும், அவரவருக்கு உகந்த வகையில் இறைவன் கொடைகளை வழங்கியுள்ளதால், அவற்றைப் புதைத்துவைக்காமல், மற்றவர்களுடன் பகிர்வதன் வழியே அவற்றைப் பெருக்கிக்கொள்ள முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை.

ஏழைகளைப் பராமரிப்பது என் பணியல்ல, அது சமூகத்தின் கடமை என்று எண்ணி பாராமுகமாகச் செயல்படுவதும் பாவமே என்று, தன் மறையுரையில் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தீமைகளைக் கடிந்துகொள்வது மட்டும் போதாது, மாறாக, நல்லவற்றை ஆற்றுவதும் அவசியம் என்று மேலும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.