2017-11-20 15:40:00

அமைதிக்காக அயர்லாந்து கிறிஸ்தவத் தலைவர்கள் அழைப்பு


நவ.20,2017. வட அயர்லாந்தில் இணை இராணுவத்தின் தாக்குதல்கள் இடம்பெற்றுவரும் வேளையில், குழந்தைகள், மற்றும், இளையோரின் நலனை மனதில் கொண்டு இத்தகையத் தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் என்று, அயர்லாந்து கிறிஸ்தவத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

அயர்லாந்து கத்தோலிக்கத் திருஅவை, மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ சபை, ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபை, Presbytarian கிறிஸ்தவ சபை, அயர்லாந்து கிறிஸ்தவர்களின் அவை ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் தலைமுறைகள் அனுபவித்த துன்பங்களை தற்போதைய குழந்தைகளும், இளையோரும் அனுபவிக்காமல் தடுக்கவேண்டியது சமூகத்தின் கடமை என்று, வலியுறுத்தியுள்ளனர்.

இளவயதிலேயே வன்முறைகளை சந்திக்கவேண்டியச் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ள அயர்லாந்து சிறார்களை காக்கவேண்டியக் கடமை, குடிமக்கள் அனைவருக்கும் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள கிறிஸ்தவத் தலைவர்கள், வன்முறைக் கலாச்சாரம் தொடர்வதைத் தடுத்து நிறுத்த முடியாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோமா என்ற கேள்வியை சமூகம் தனக்குத் தானே கேட்கவேண்டிய நேரம் வந்துள்ளது என்றும், விண்ணப்பித்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.