2017-11-18 14:25:00

பொதுக்காலம் 33ம் ஞாயிறு: வறியோர் உலக நாள் - ஞாயிறு சிந்தனை


மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த உரோமையப் பேரரசன் வலேரியன், கத்தோலிக்க திருமறையைச் சேர்ந்த ஆயர்கள், அருள்பணியாளர்கள், தியாக்கோன்கள் அனைவரையும் கொல்லும்படி ஆணையிட்டான். கோவில் சொத்துக்கள் அனைத்தையும் அபகரித்தான். அப்போது திருத்தந்தையாகப் பணியாற்றிய, புனித 2ம் சிக்ஸ்துஸ் அவர்கள், தன் மரணம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்து, இலாரன்ஸ் என்ற இளையவரை தியாக்கோனாக அருள்பொழிவு செய்து, திருஅவையின் உடைமைகள் அனைத்திற்கும், அவரை, பொறுப்பாளராக நியமித்தார்.

258ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, திருத்தந்தை 2ம் சிக்ஸ்துஸ் அவர்கள் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்த வேளையில், கைது செய்யப்பட்டு, பின்னர், கொல்லப்பட்டார். இளைய தியாக்கோன் இலாரன்ஸ் அவர்களும் கைது செய்யப்பட்டார். அவரே திருஅவை சொத்துக்கள் அனைத்திற்கும் பொறுப்பானவர் என்பதைக் கேள்விப்பட்ட வலேரியன், ஒரு நிபந்தனையின் பேரில் அவருக்கு விடுதலை தந்தான். மூன்று நாட்களில், இலாரன்ஸ் அவர்கள், திருஅவை சொத்துக்கள் அனைத்தையும் மன்னனிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதே, அந்த நிபந்தனை.

தன் இல்லம் திரும்பிய இலாரன்ஸ் அவர்கள், கோவிலுக்குச் சொந்தமான அனைத்து செல்வங்களையும் விற்று, வறியோருக்கு வழங்கினார். ஆகஸ்ட் 10ம் தேதி, பேரரசன் வலேரியன் அரண்மனைக்கு முன் நின்றார், இலாரன்ஸ். கோவில் சொத்துக்கள் எங்கே என்று மன்னன் கேட்டபோது, இலாரன்ஸ் அவர்கள், தனக்குப் பின் ஆயிரக்கணக்கில் நின்றுகொண்டிருந்த வறியோர், வியாதியுற்றோர், கைம்பெண்கள் அனைவரையும் சுட்டிக்காட்டி, "அரசே, இதோ நீங்கள் கேட்ட செல்வங்கள். இவர்களே, திருஅவையின் சொத்து, கருவூலம், எல்லாம்" என்று கூறினார். இதைக் கேட்டு வெகுண்டெழுந்த பேரரசன் வலேரியன், இளையவர் இலாரன்ஸை மிகக் கொடுமையான மரணத்திற்கு உள்ளாக்கினான்.

"வறியோரே, திருஅவையின் சொத்து, கருவூலம்" என்று, 3ம் நூற்றாண்டில் முழக்கமிட்ட புனித இலாரன்ஸ் அவர்களின் கூற்றை மீண்டும் ஒருமுறை நினைவுகூர, அந்த உண்மையை வாழ்வில் நடைமுறைபடுத்த, இந்த ஞாயிறு நாம் அழைக்கப்பட்டுள்ளோம். ஆம்... நவம்பர் 19, இஞ்ஞாயிறன்று, வறியோர் உலக நாளைச் சிறப்பிக்கின்றோம். வறியோரே திருஅவையின் சொத்து என்பதை உலகறியச் செய்த புனித இலாரன்ஸ் பசிலிக்காவில், நிகழ்ந்த திருவிழிப்பு வழிபாட்டுடன், வறியோர் உலக நாள் ஆரம்பமானது, பொருத்தமான அடையாளம்.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நிறைவுற்ற இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த உலக நாளை, வழிபாட்டு ஆண்டின் ஒரு பகுதியாக உருவாக்கினார். ஒவ்வோர் ஆண்டும், வழிபாட்டு ஆண்டின் நிறைவாக, நாம் கொண்டாடும் கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்கு முந்தைய ஞாயிறு, அதாவது, பொதுக்காலம், 33ம் ஞாயிறை, வறியோர் உலக நாளாகச் சிறப்பிக்க திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கிய வறியோர் உலக நாள், இவ்வாண்டு, முதல் முறையாகச் சிறப்பிக்கப்படுவதால், இன்றைய நம் சிந்தனைகளை, இந்த உலக நாளின் மீது திருப்புவோம். வறியோர் உலக நாளை உருவாக்கும் எண்ணம் தனக்கு எவ்விதம் தோன்றியது என்பதை, திருத்தந்தை அவர்கள், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இறுதியில் வெளியிட்ட 'இரக்கமும் அவலநிலையும்' (Misericordia et Misera) என்ற திருத்தூது மடலில் குறிப்பிட்டுள்ளார்.

2016ம் ஆண்டு திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட 'இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில்', பல்வேறு பிரிவினர் வத்திக்கானுக்கு வருகை தந்து, தங்கள் யூபிலியைக் கொண்டாடினர். வளர் இளம் பருவத்தினர், தியாக்கோன்கள், அருள்பணியாளர்கள் என்று, வெவ்வேறு பிரிவினர் வத்திக்கானில் கூடி யூபிலியைக் கொண்டாடினர். 2016ம் ஆண்டு, செப்டம்பர் மாதத் துவக்கத்தில், இரக்கப்பணியாளர்களின் யூபிலி கொண்டாடப்பட்டபோது, இரக்கத்தின் தூதரான, அன்னை தெரேசா அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதராக உயர்த்தியது, இந்த யூபிலி ஆண்டின் ஒரு சிகர நிகழ்வாக அமைந்தது.

திருஅவை வரலாற்றில், கொண்டாடப்பட்ட பல யூபிலி ஆண்டுகளை, பொதுவாக, திருத்தந்தையர், கர்தினால்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவறத்தார், பக்த சபையினர், இரக்கப் பணியாளர்கள், பொதுநிலையினர் ஆகியோர் கூடிவந்து சிறப்பித்துள்ளனர். இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இறுதி இருவாரங்கள் வத்திக்கானில் கூடியவர்களைப் பார்க்கும்போது, நாம் கொண்டாடிவந்த யூபிலி வரலாற்றில் ஒரு மாற்றம் நிகழ்ந்ததைக் காணமுடிந்தது. ஆம், 2016ம் ஆண்டு, நவம்பர் 5, 6 மற்றும் நவம்பர் 11, 12, 13 ஆகிய நாள்களில், இதுவரை, திருஅவை வரலாற்றின் யூபிலி விழாக்களில் கலந்துகொள்ளாத விருந்தினர்கள், வத்திக்கானுக்கு வரவழைக்கப் பட்டிருந்தனர். அவர்கள் – சிறைப்பட்டோர் மற்றும், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோர்.

'யூபிலி' கொண்டாட்டங்கள் ஏன் உருவாக்கப்பட்டன என்ற கேள்விக்கு விவிலியத்தில், விடை தேடும்போது, சிறைப்பட்டோர் மற்றும், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோர் அங்கு கூறப்பட்டுள்ளனர். "ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிப்பது, சிறைப்பட்டோர் விடுதலை அடைவது, பார்வையற்றோர் பார்வை பெறுவது, ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவது" (லூக்கா 4:18-19) ஆகியவை, அருள்தரும் ஆண்டில் நிகழவேண்டிய அற்புதமானப் பணிகள் என்று இயேசு அறிவித்ததை, நாம், லூக்கா நற்செய்தி 4ம் பிரிவில் வாசிக்கிறோம். இந்தப் பட்டியலில், சிறைப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் அல்லது, ஒதுக்கப்பட்டோர் இடம்பெற்றுள்ளனர். சிறைப்பட்டோரும், ஒதுக்கப்பட்டோரும் யூபிலியைக் கொண்டாட, அதிகாரப்பூர்வமாக, வத்திக்கானுக்கு அழைக்கப்பெறுவது, திருஅவை வரலாற்றில் இதுவே முதல் முறை என்று, இரக்கத்தின் யூபிலி ஆண்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்த, புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர், பேராயர் ரீனோ பிசிக்கெல்லா (Rino Fisichella) அவர்கள் கூறினார்.

நவம்பர் 6ம் தேதி, ஞாயிறு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் சிறைப்பட்டோரின் யூபிலித் திருப்பலியை திருத்தந்தை நிறைவேற்றியபோது, இத்தாலி, இங்கிலாந்து, மலேசியா, மெக்சிகோ, தென்னாப்ரிக்கா உட்பட, 12 நாடுகளிலிருந்து வத்திக்கானுக்கு வருகை தந்த கைதிகள், அவர்களது குடும்பத்தினர், சிறைக்காவலர்கள், சிறைகளில் ஆன்மீகப் பணியாற்றும் அருள்பணியாளர்கள் என, 4000த்திறகும் அதிகமானோர், இந்த யூபிலித் திருப்பலியில் கலந்துகொண்டனர். அதேவண்ணம், நவம்பர் 13ம் தேதி, ஞாயிறு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், திருத்தந்தை ஆற்றிய திருப்பலியில், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோர் 6000த்திற்கும் அதிகமாகக் கலந்துகொண்டனர். பல நூற்றாண்டுகளாக கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைச் சின்னமாக விளங்கும் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், சிறைக்கைதிகளும், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோரும் பங்கேற்ற திருப்பலிகள் முதன்முறையாக நிகழ்ந்தன என்பது, நம் திருஅவைக்கு, புதியதோர் இலக்கணத்தை வகுக்கிறது.

எந்த ஒரு நிகழ்விலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களைச் சந்திக்கும் வேளைகளில், அவராகச் சென்று மக்களை அணைத்து ஆசீரளிப்பதும், அல்லது, மக்கள் தாங்களாகவே வந்து திருத்தந்தையை அணைப்பதும், குறிப்பாக, குழந்தைகளும், சிறுவர், சிறுமியரும் தயக்கமேதுமின்றி அவரிடம் தாவிச்செல்வதும் நாம் அடிக்கடி பார்த்துவரும் காட்சிகள். நவம்பர் 11, வத்திக்கானில் நிகழ்ந்த ஒரு காட்சி, கட்டாயம் பலரின் மனதில் முதல் முறை பதிந்த ஓர் அற்புத அனுபவமாக அமைந்திருக்கும்.

நவம்பர் 11, வெள்ளியன்று, திருத்தந்தை அருளாளர் 6ம் பவுல் அரங்கத்தில், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோர், ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர். அச்சந்திப்பில், தன் உரையின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த அனைவருக்காகவும் செபித்தபின், மேடையில் ஓர் அற்புத நிகழ்வு இடம்பெற்றது. அதாவது, மேடையில், திருத்தந்தைக்கு இருபுறமும் அமர்ந்திருந்த அனைத்து வறியோரும் திருத்தந்தையைச் சூழ்ந்து நின்று, அவரது தோள்களில் கரங்களை வைத்து செபித்தனர். அந்நேரம், "படைத்திடும் தூய ஆவியாரே இறங்கிவாரும்" என்ற பாரம்பரிய பாடலும், அதைத்தொடர்ந்து ஒரு சிறு செபமும் சொல்லப்பட்டது. வறியோரின் கரங்கள், திருத்தந்தையின் தோள்மீது பதிந்திருக்க, திருத்தந்தை கண்களை மூடி செபித்தது, பலருக்கு, 2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, புனித பேதுரு வளாகத்தில் நிகழ்ந்ததை நினைவுக்குக் கொணர்ந்திருக்கும்.

2013ம் ஆண்டு, மார்ச் 13ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப்பணிக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் மேல் மாடத்தில் முதல்முறையாக மக்களைச் சந்திக்க வந்தார். அப்போது, உரோமைய ஆயராகிய தான், மக்களுக்கு ஆசீர் வழங்குவதற்கு முன், மக்கள் தனக்காக செபிக்கும்படி விண்ணப்பித்து, வளாகத்தில் கூடியிருந்தோர் முன்னிலையில், திருத்தந்தை தலைவணங்கி நின்றார். அத்தருணத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தலைமைப் பணிக்கு, தனிப்பட்ட ஒரு முத்திரையை, பதித்தார் என்று, இன்றளவும் பலர் கூறிவருகின்றனர்.

2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி மாலை மக்களின் செபங்களுக்காகத் தலைவணங்கி நின்ற திருத்தந்தை அவர்கள், 2016ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி, வறியோர் நடுவில் மீண்டும் தலைவணங்கி நிற்க, அவர்கள், அவரது தோள் மீது கரங்களை வைத்து செபித்தனர். வறியோரின் கரங்களால் ஒரு திருத்தந்தை ஆசீர்பெற்றது, திருஅவை வரலாற்றில், பல நூற்றாண்டுகளாக, வெளிப்படையாக இடம் பெறாத ஒரு நிகழ்வு என்று நிச்சயம் சொல்லலாம்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இறுதிமாத விருந்தினர்களாக வத்திக்கானுக்கு அழைக்கப்பட்டிருந்த வறியோர் வழியே கிடைத்த அருள் நிறைந்த அனுபவங்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருக்கவேண்டும். அந்த அனுபவங்களே, வறியோர் உலக நாள் உருவாக காரணமாக அமைந்தன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இரக்கமும் அவலநிலையும்' (Misericordia et Misera) என்ற தன் திருத்தூது மடலில் குறிப்பிட்டுள்ளார்.

வறியோர் உலக நாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறப்புச் செய்தியொன்றை, இவ்வாண்டு, சூன் 13ம் தேதி, பதுவை நகர் புனித அந்தோனியார் திருநாளன்று வெளியிட்டார். "சொற்களால் அல்ல, செயல்களால் அன்புகூருவோம்" என்ற தலைப்பில், திருத்தந்தை வெளியிட்ட செய்தியின் சில வரிகள், நம் சிந்தனைகளை நிறைவு செய்யட்டும்:

எண் 3:

வறுமையுற்ற சகோதர, சகோதரிகளுக்கு, எளிமையுடன், பணிவுடன், தாராள மனதுடன் பணியாற்றிய கிறிஸ்தவர்களால், கடந்த 2000 ஆண்டுகளுக்கும் மேலாக, பல வரலாற்றுப் பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. அவர்களில் தலைசிறந்த எடுத்துக்காட்டாக விளங்குபவர், அசிசி நகர், புனித பிரான்சிஸ்.

நாம் கிறிஸ்துவை உண்மையிலேயே சந்திக்கவேண்டுமெனில், அவரது உடைபட்ட உடலைத் தொடவேண்டும். நமது திருவழிபாட்டில் உடைக்கப்படும் கிறிஸ்துவின் உடலை, நலிவுற்ற நம் சகோதர, சகோதரிகளின் முகங்களில் காணமுடியும். புனித ஜான் கிறிசொஸ்தம் கூறிய சொற்கள், இன்றும் பொருளுள்ளதாக விளங்குகின்றன: "கிறிஸ்துவின் உடலுக்கு மதிப்பு செலுத்த விழைந்தால், அது ஆடையின்றி கிடக்கும்போது, அலட்சியப்படுத்தக்கூடாது; நற்கருணையில் உள்ள கிறிஸ்துவை, பட்டுத் துணிகளால் மூடி, மரியாதை செலுத்திவிட்டு, குளிரில், ஆடையின்றி கிடக்கும் மறு கிறிஸ்துவை புறக்கணியாதே."

எண் 6

இரக்கத்தின் யூபிலி நிறைவுற்ற வேளையில், வறியோரின் உலக நாளை, திருஅவைக்கு ஒரு காணிக்கையாக வழங்க நினைத்தேன். வறியோருக்குக் காட்டும் சிறப்பான விருப்பத்தேர்வு, நற்செய்தியின் சிகரமான மதிப்பீடுகளில் ஒன்று என்பதை நாம் உணரவேண்டும் என்று விரும்பினேன்.

எண் 7

வறியோரை நமது இல்லங்களுக்கு, மதிப்பு மிக்க விருந்தினர்களாக அழைப்போமாக. நமது கிறிஸ்தவ விசுவாசத்தை, தகுந்த முறையில் வாழ்வதற்கு, அவர்கள் நமது ஆசிரியர்களாக இருப்பர். உதவிகள் பெறுவதற்கு அவர்கள் காட்டும் தயார் நிலையும், நம்பிக்கையும், கடவுளின் பராமரிப்பிற்கு நம்மையே கையளிக்கவேண்டும் என்ற அடிப்படைப் பாடத்தைச் சொல்லித்தருகின்றன.

எண் 9

இந்த உலக நாள், நம் மனசாட்சிக்கு சக்தி மிகுந்த ஒரு விண்ணப்பமாக அமையவேண்டும். வறியோருடன் பகிர்ந்துகொள்வதே, நற்செய்தியின் ஆழமான உண்மைகளைப் புரிந்துகொள்ளும் வழி. வறியோர், பிரச்சனைகள் அல்ல; நற்செய்தியின் அடிப்படை சாரத்தை ஏற்று, அதை வாழ்வில் கடைபிடிக்கச் சொல்லித்தரும் ஆசான்களே, வறியோர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.