2017-11-18 15:23:00

திருத்தந்தை, மியான்மார் கர்தினால் போ சந்திப்பு


நவ.18,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் 27ம் தேதி முதல், 30ம் தேதி வரை, மியான்மாருக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவுள்ளவேளை, மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள், இச்சனிக்கிழமை காலையில், வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பு பற்றி வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, கர்தினால் சார்லஸ் போ அவர்கள், அன்பும் அமைதியும் என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் திருத்தூதுப் பயணம், பல்வேறு இன மற்றும் சமயக் குழுக்களிடையே அன்பையும், அமைதியையும் நிச்சயமாக ஊக்குவிக்கும் என்று தெரிவித்தார்.

நவம்பர் 26ம் தேதி மியான்மாருக்குப் புறப்படும் திருத்தந்தை, 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை, அந்நாட்டின் புதிய தலைநகர் Nay Pyi Taw, தலைநகர்  யாங்கூன் ஆகிய இரு நகரங்களில் பயண நிகழ்வுகளை நிறைவேற்றுவார் திருத்தந்தை. அதன்பின் பங்களாதேஷ் செல்வார் திருத்தந்தை பிரான்சிஸ். இது, திருத்தந்தையின் 21வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாகவும், ஆசியாவுக்கு மூன்றாவது முறையாக செல்லும் பயணமாகவும் அமையும்.

மேலும், UNITAID அமைப்பின் செயல்திட்ட இயக்குனர் Lelio Marmora அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இச்சனிக்கிழமை காலையில், வத்திக்கானில் சந்தித்து கலந்துரையாடினார்.

உலகளாவிய நலவாழ்வு அமைப்பான UNITAID, காசநோய், HIV/AIDS மற்றும் மலேரியா நோய்களை ஒழிப்பதற்கு, ஏனைய உலகளாவிய நலவாழ்வு அமைப்புகளோடு இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, பிரேசில், சிலே, பிரான்ஸ், நார்வே, பிரிட்டன் ஆகிய நாடுகளின் அரசுகளால் 2006ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.