2017-11-16 15:18:00

புனித பொனவெஞ்சர் கருத்தரங்கு முன்னாள் திருத்தந்தையின் செய்தி


நவ.16,2017. 13ம் நூற்றாண்டில் பிறந்த புனித பொனவெஞ்சர் (Bonaventure) அவர்களது பிறப்பின் எட்டாம் நூற்றாண்டு நினைவாக, உரோம் நகர் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஒரு பன்னாட்டு கருத்தரங்கிற்கு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

"அனைத்திற்கும் மேலான இறைவனை அறிவதற்கு: புனித பொனவெஞ்சரின் இறையியல்" என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கின் முதல் அமர்வில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தியை, இராட்சிங்கர் அறக்கட்டளையின் இயக்குநராகப் பணியாற்றும், இயேசு சபை அருள்பணியாளர், Federico Lombardi அவர்கள் வாசித்தார்.

நம்மைச் சூழ்ந்துள்ள அறியாமை என்ற இருளுக்கு நடுவே, அன்பு, ஒரு சக்தியாக இருந்து நம்மை வழிநடத்தும் என்று புனித பொனவெஞ்சர் கூறியிருப்பது, ஏனைய பல புனிதர்களிலிருந்து அவரைத் தனித்து அடையாளப்படுத்துகிறது என்று, 16ம் பெனடிக்ட் அவர்களின் செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.

‘வானதூதரைப்போன்ற மறைவல்லுனர்’ என்று புகழ் பெற்றுள்ள புனித பொனவெஞ்சர், தத்துவ மேதை அரிஸ்டாட்டில் போன்றோருடன் ஒப்புமைப்படுத்தப்பட்டவர் என்றும், அவரது ஆழ்ந்த சிந்தனைகள், பல தலைமுறைகளுக்கு வழிகாட்டியுள்ளன என்றும் 16ம் பெனடிக்ட் அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.