2017-11-16 15:09:00

COP23 உச்சி மாநாட்டில் ஐ.நா. பொதுச்செயலரின் உரை


நவ.16,2017. காலநிலை மாற்றங்களின் பாதிப்பைக் குறைக்க, உலக அரசுகள் இன்னும் தீவிரமான, தலைமைத்துவ, மற்றும் கூட்டுறவு முயற்சிகளை மேற்கொள்வது, நம்முடைய தலைமுறைக்கும், எதிர்காலத் தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமை என்று, ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.  

ஜெர்மன் நாட்டின் Bonn நகரில் நடைபெற்றுவரும் COP23 உலக உச்சி மாநாட்டில், இப்புதனன்று வழங்கிய உரையில், கூட்டேரஸ் அவர்கள், ஒவ்வோர் அரசும் தங்கள் நாடுகளில், மற்றும் வேற்று நாடுகளுடன் மேற்கொள்ள வேண்டிய முக்கிய முயற்சிகள் குறித்துப் பேசினார்.

அதிகரித்து வரும் வெப்ப நிலையை, 2 டிகிரி செல்சியுஸ் அளவுக்குக் குறைப்பதென 2015 டிசம்பர் மாதம் எடுக்கப்பட்ட பன்னாட்டு ஒப்பந்தத்திற்கு, 196 நாடுகள் ஆதரவு அளித்தன என்றும், இவற்றில், 170 நாடுகள் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன என்றும் ஐ.நா. அறிக்கையொன்று கூறுகிறது.

பசுமைத் திட்டத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படாத தொழிற்சாலைகளுக்கு அனுமதி மறுப்பது என்ற எளிய சட்டத்தை, அனைத்து நாடுகளும் கடைபிடித்தால், நாம் எதிர்பார்க்கும் மாற்றங்கள் நடைபெறும், இல்லையேல், நாம் அழிவை உருவாக்கும் வலைக்குள் நிரந்தரமாகச் சிக்கிக்கொள்வோம் என்று ஐ.நா. பொதுச் செயலர் கூட்டேரஸ் அவர்கள் எச்சரிக்கை விடுத்தார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.