2017-11-16 14:59:00

COP23 உச்சி மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பிய செய்தி


நவ.16,2017. காலநிலை மாற்றம் குறித்து பாரிஸ் மாநகரில் உருவான ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொணர்வதில் பல நாடுகள் உடனுக்குடன் ஈடுபட்டது, இந்தப் பிரச்சனையின் முக்கியத்துவத்தை நமக்குத் தெளிவாக்குகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பன்னாட்டுக் கூட்டம் ஒன்றுக்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறியுள்ளார்.

ஜெர்மன் நாட்டின் Bonn நகரில், நவம்பர் 6ம் தேதி முதல், 17ம் தேதி முடிய நடைபெற்றுவரும் COP23 உலக உச்சி மாநாட்டிற்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தி, இந்த மாநாட்டிற்கு தலைமை வகிக்கும் Fiji தீவுகளின் பிரதமர்,  Frank Bainimarama அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குறைவான கார்பன் வெளியேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வழிகளை வலியுறுத்திய பாரிஸ் ஒப்பந்தம், காலநிலை மாற்றத்திற்கும், வறுமைக்கும் எதிராக போராட்டங்களை மேற்கொள்வதையும் சுட்டிக்காட்டுகிறது என்று, திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

காலநிலை மாற்றம் இல்லை என்று சாதிக்கும் நிலை, இப்பிரச்சனை குறித்து அக்கறையற்ற நிலை, இதில் செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற சரணாகதி, மற்றும், தொழிநுட்ப தீர்வுகள் மீது குருட்டுத்தனமான நம்பிக்கை என்ற நான்கு மனநிலைகளை உலக அரசுகள் தவிர்க்கவேண்டும் என்று திருத்தந்தை தன் செய்தியில் விண்ணப்பித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.