2017-11-15 14:39:00

வறியோருடன் மதிய உணவருந்தும் திருத்தந்தை பிரான்சிஸ்


நவ.15,2017. நவம்பர் 19 வருகிற ஞாயிறன்று, வறியோரின் முதல் உலக நாளை சிறப்பிக்கும் வகையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்காவில் தலைமையேற்று நிகழ்த்தும் திருப்பலியில் கலந்துகொள்ள, ஐரோப்பாவின் பல்வேறு நகரங்களிலிருந்து வறியோர் வருகை தருகின்றனர்.

4000த்திற்கும் அதிகமாக வத்திக்கானுக்கு வருகை தரும் வறியோர் அனைவருக்கும், திருப்பலிக்குப் பின், மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், இவர்களில் 1500 பேருடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருளாளர் ஆறாம் பால் அரங்கத்தில் மதிய உணவருந்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உரோம், பாரிஸ், வார்சா, பிரஸ்ஸல்ஸ், லக்ஸம்பர்க் ஆகிய நகரங்களிலிருந்து வருகை தரும் வறியோருக்கு, உரோம் நகரின் பல்வேறு குருத்துவ பயிற்சி மையங்கள், கல்லூரிகள் மற்றும் உணவகங்களில் மதிய உணவு வழங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், புனித பேதுரு பசிலிக்கா வளாகத்திற்கருகே நவம்பர் 13, இத்திங்கள் முதல், 19, வருகிற ஞாயிறு முடிய இயங்கி வரும் மருத்துவ முகாமில், வறியோருக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகளும், உதவிகளும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று, இந்த உலக நாள் நிகழ்வுகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும், புதிய வழி நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவை அறிவித்துள்ளது.

உரோமையப் பேரரசர் முன், வறியோரை அழைத்துச் சென்று, "இவர்களே, திருஅவையின் உண்மையான கருவூலம்" என்று கூறிய தியாக்கோனாகிய புனித லாரன்ஸ் நினைவாக எழுப்பப்பட்டுள்ள பசிலிக்காவில், நவம்பர் 18, சனிக்கிழமை, வறியோர் உலக நாளின் திருவிழிப்பு வழிபாடு ஒன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.