2017-11-15 14:50:00

இலங்கையில் வறியோரை மையப்படுத்திய ஞாயிறு வழிபாடுகள்


நவ.15,2017. நவம்பர் 19, வருகிற ஞாயிறன்று, வறியோர் உலக நாள், திருஅவை வரலாற்றில் முதன்முறையாகச் சிறப்பிக்கப்படும் வேளையில், இலங்கையில் உள்ள அனைத்து பங்கு கோவில்களும், கத்தோலிக்க நிறுவனங்களும், இந்த முயற்சியில் முழுமையாக ஈடுபடவேண்டுமென, கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

பொருளாதார நிலையிலும், ஆன்மீக நிலையிலும் நிலவும் வறுமை, இலங்கையில் வாழும் குடும்பங்களைப் பாதிக்கும் இன்றையச் சூழலில், திருத்தந்தையின் அழைப்பு பொருள் நிறைந்ததாக உள்ளது என்று கொழும்பு பேராயர், கர்தினால் இரஞ்சித் அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் 19ம் தேதி நடைபெறும் ஞாயிறு வழிபாடுகள் அனைத்திலும், வறியோரை மையப்படுத்தி, சிந்தனைகள், மறையுரைகள், செபங்கள் ஆகியவை நிகழ்வதோடு, வறியோருக்கு உதவும் செயல்பாடுகளும் திட்டமிடப்பட வேண்டும் என்று கர்தினால் இரஞ்சித் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

உலகமயமாக்கல் என்ற போக்கினால், செல்வந்தர்கள் மேலும், மேலும் செல்வங்களைக் குவிப்பதும், அதன் விளைவாக, வறியோர் அதிகமாக துன்புறுவதும் நிகழ்கின்றன என்று தன் அறிக்கையில் கூறும் கர்தினால் இரஞ்சித் அவர்கள், இந்தப் பொருளாதாரக் கொடுமை, தீவிரவாதத்தையும், அடிப்படைவாத உணர்வுகளையும் தூண்டி விடுகின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.