2017-11-13 16:07:00

பிறரன்பைத் தூண்டும் விசுவாசம் உயிருடன் இருக்க பிறரன்பு தேவை


நவ.13,2017. இறைவனுக்காக காத்திருப்பது என்பது, தூங்காமல் விழித்திருப்பதை மட்டும் குறிப்பிடவில்லை, மாறாக, தயாரிப்பு நிலையில் இருப்பதையும் குறிக்கிறது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஏறத்தாழ 25,000 திருப்பயணிகள் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தை நிறைத்திருக்க, அவர்களுக்கு ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாளின் நற்செய்தி வாசகமான, 'மணமகளின் பத்து தோழியர்’ உவமைக் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

மணமகளின் பத்து தோழியர் உவமையில் கூறப்பட்டிருக்கும் விளக்கானது, வாழ்வை ஒளிர்விக்கும் விசுவாசத்தின் அடையாளமாகவும், எண்ணெய் என்பது நம் விசுவாசத்தை பலனுள்ளவதாகவும், நம்பகத்தன்மையுடையதாகவும் மாற்றும் பிறரன்பின் அடையாளமாகவும் உள்ளது என்றார் திருத்தந்தை.

மணமகனின் வருகைக்காக காத்திருக்கும் நாம், தினசரி வாழ்வின் நற்செயல்கள் வழியாக எண்ணெயை சேகரித்து வைத்திருப்பதால், மரணம் எனும் தூக்கத்தைக் கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமக்கு, நாளும், நேரமும், தெரியாததால், நாம் எப்போதும் விழிப்புடன் செயல்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

கடவுளை நாம் சந்திப்பதற்குரிய நிபந்தனையாக விசுவாசம் மட்டும் இல்லை, மாறாக, ஒருவர் ஒருவர் மீது காட்டும் அன்பை உள்ளடக்கிய கிறிஸ்தவ வாழ்வும் உள்ளது என்றார்  திருத்தந்தை.

நம் பிறரன்பு நடவடிக்கைகள் வழியாகவே, விசுவாசம் எனும் விளக்கிற்கான எண்ணெயைச் சேகரிக்க முடியும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விசுவாசம் நம் பிறரன்பைத் தூண்டும் அதேவேளை, பிறரன்பு நம் விசுவாசம் உயிருடன் இருக்க உதவுகிறது என மேலும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.