2017-11-13 15:42:00

தேசிய கலந்துரையாடல் அவைக்கு கென்ய ஆயர்கள் அழைப்பு


நவ.13,2017. மோதல்களையும், உடைந்து செல்லும் கூறுகளையும் எதிர்நோக்கியிருக்கும் கென்யா நாட்டில், நாட்டை ஒன்றிணைத்துக் கொண்டுவரும் நோக்குடன், தேசிய கலந்துரையாடல் அவை உருவாக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள். தங்கள் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தின் இறுதியில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கென்ய ஆயர்கள், கடந்த தேர்தல் முடிவுகள் குறித்த முரண்பாடுகள் தலைதூக்கி நிற்கும் வேளையில், அரசியல் மற்றும் இன அடிப்படையில் பெரும்பிரிவினைகளை, நாடு சந்திக்கும் அபாயம் உள்ளது என்ற கவலையை அதில் தெரிவித்துள்ளனர்.

வன்முறைகளும், காவல்துறையின் அடக்குமுறைகளும் அதிகரித்து வருகின்றன என்பதையும் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், பிரிவினைகளும், அரசுக்கு கீழ்ப்படியா நிலைகளும், போராட்டங்களும், வேலை நிறுத்தங்களும், மேலும் பதட்ட நிலைகளுக்கே வழிவகுத்துள்ளன எனவும் தெரிவித்துள்ளனர்.

வளங்கள் சரியாக பகிரப்படாமை, ஏழைகளின் தொடர் துன்ப நிலை, அரசியல் விருப்பார்வமின்மை போன்றவை, கோபங்களுக்கும் சகிப்பற்ற நிலைகளுக்கும் இட்டுச் செல்லும் ஆபத்தையும் சுட்டிக்காட்டியுள்ளனர், கென்ய ஆயர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.