2017-11-13 16:14:00

உரிமைகளுக்கான அமெரிக்க ஆயர்களின் தொடர் பணிக்கு பாராட்டு


நவ.13,2017. அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தின் துவக்கத் திருப்பலியில் மறையுரையாற்றிய திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், பல்வேறு சவால்களை எதிர்கொண்டுவரும் அந்நாட்டில், ஆயர்களின் சாட்சிய வாழ்வுக்கு தன் ஊக்கத்தை வழங்குவதாகத் தெரிவித்தார்.

இப்புதன் வரை இடம்பெற உள்ள அமெரிக்க ஆயர் பேரவையின் நிறையமர்வுக் கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக, பால்டிமோர் அன்னைமரியின் விண்ணேற்பு தேசியத் திருத்தலத்தில் கூடியிருந்த ஆயர்களுக்கு, இஞ்ஞாயிறன்று, திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கிய திருப்பீடச் செயலர்,  இறைவனின் விருப்பத்தை நாம் நிறைவேற்ற தூய ஆவியானவரின் கொடையாகிய தெய்வீக ஞானம் நமக்கு உதவுகிறது என்றார்.

பாதுகாப்பையும் புதிய வாழ்வையும் தேடி வந்த மக்களுக்காக அவை ஒன்றை துவக்கி நூறு ஆண்டுகளாக பணியாற்றிவரும் அமெரிக்க ஐக்கிய நாட்டு திருஅவை, தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் அகதிகள் மற்றும் புலம்பெயர்வோரின் பிரச்னைகளை குணப்படுத்தும் உணர்வுடனும், நம்பிக்கை தரும் விதமாகவும், ஆறுதலின் கருவியாகவும் தீர்வு காணவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார், கர்தினால் பரோலின். 

அமெரிக்க திருஅவையின் பிறரன்பு அமைப்புக்களுக்கு தன் தனிப்பட்ட பாராட்டை வெளியிட்ட திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின் அவர்கள், மனித இதயத்தின் ஏக்கங்களை நிறைவேற்றும்  உண்மையான மகிழ்ச்சியை வழங்கவல்ல கிறிஸ்துவுடன் ஆன உறவில் மக்களைக் கொண்டுவர ஆயர்கள் உழைக்கவேண்டும் என மேலும் கேட்டுக்கொண்டார்.

மக்கள் அனைவரும் நலவாழ்வு வசதிகளைப் பெறுவதற்கும், கருவில் வளரும் குழந்தைகளின் உரிமைகளுக்காகவும் அமெரிக்க ஆயர்கள் தொடர்ந்து போராடி வருவதற்கும் தன் பாராட்டுதல்களை வெளியிட்டார் கர்தினால் பரோலின்.

ஏழைகள், முதியோர், ஓரம் தள்ளப்பட்டோர், குரலற்றோர் ஆகியோருக்காக போராடிவரும் தலத்திருஅவையின் பணிகள் தொடர்வதற்கு ஊக்கமளிப்பதாகவும் மேலும் கூறினார் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின்.

ஆதாரம் : CNA/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.