2017-11-11 15:54:00

கடலை அடிநீர் கல்லறைகளாக மாற்றியது யார்


நவ.,11,2017. கடல் நீர் மட்டம் உயர்வதாலும், கடல் வளங்கள் அழிவுக்குள்ளாகி வருவதாலும், சுற்றுச்சூழல் அழிவு, மற்றும், தட்ப வெப்ப நிலை மாற்றங்களாலும், பல்வேறு பாதிப்புக்களை சந்தித்து வரும் மக்கள் மீது அக்கறை காட்டி செயல்பட்டு வரும் பசிபிக் தீவுகளின் தலைவர்களை பாராட்டுவதாகத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பசிபிக் தீவுகளின் தலைவர்கள் கூட்டமைப்பு என்ற குழுவின் பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'கடலின் வியக்கத்தக்க வளங்களை நிறமும் உயிருமற்ற நீரடிக் கல்லறைகளாக மாற்றியது யார்' என 30 ஆண்டுகளுக்கு முன்னரே பிலிப்பீன்ஸ் ஆயர்கள் எழுப்பிய கேள்வியை நினைவூட்டினார்.

இயற்கையைச் சுரண்டும் மனிதரின் சுயநலப் போக்குகளே அனைத்திற்கும் காரணம் என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை, இத்தகைய பாதிப்புக்களால் வேறு புகலிடம் செல்ல முடியாமல் தவிக்கும் மக்களின் பிரச்னைகளுக்கு, அனைத்துலக அளவில் ஒன்றிணைந்த நடவடிக்கை தேவை என்பதை வலியுறுத்தினார்.

மனிதர்களை பெருமளவில் பாதிக்கும் சுற்றுச்சூழல் அழிவை தவிர்க்கும் பொருட்டு, உலகளாவிய பார்வை, ஒத்துழைப்பு, ஒருமைப்பாடு, யுக்திகளைப் பகிர்தல் போன்றவற்றைக் கையாளுவதுடன், பாராமுகம் எனும் போக்கையும் சமூகங்கள் களைய வேண்டும் என விண்ணப்பித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட பல்வேறு கழிவுகளால் கடல்கள் மாசு கேடடைந்து வருவதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடற்கரையோர மக்களின் வாழ்வாதாரங்கள் குறித்து அனைவரும் பொறுப்புடன் செயல்படவேண்டியதையும் வலியுறுத்தினார்.

பசிபிக் பகுதி தீவுகளின் இந்த கூட்டமைப்பினருடன் திருத்தந்தை நடத்திய இந்த சந்திப்பில், ஆஸ்திரேலியா, குக் தீவு, மைக்ரோனேசியா கூட்டமைப்பு, ஃப்ரெஞ்ச் மொழி பேசும் பொலினேசியா தீவுகள், நியூசிலாந்து, பாப்புவா நியூ கினி, மார்ஷல் தீவு, Kiribati, Nauru, Samoa, Vanuatu ஆகிய நாடுகளின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.