2017-11-09 15:25:00

கட்டுதல், பாதுகாத்தல், தூய்மையாக்குதல், திருஅவைக்குத் தேவை


நவ.09,2017. கட்டுதல், பாதுகாத்தல், தூய்மையாக்குதல் என்ற மூன்று செயல்கள் திருஅவைக்குத் தேவையானவை என்ற கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை வழங்கிய மறையுரையில் பகிர்ந்துகொண்டார்.

'கத்தோலிக்க ஆலயங்களின் அன்னை' என்றழைக்கப்படும் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா பேராலயத்தின் அர்ப்பணிப்பு பெருவிழாவான, இவ்வியாழனன்று, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, 'ஆலயங்களின் அன்னை' என்பது, பெருமைப்படும் அம்சம் அல்ல, மாறாக, பணியாற்றும் அழைப்பு என்று தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

ஆலயத்தைக் கட்டுதல் என்று சொல்லும்போது, கற்களால் உருவாகும் ஆலயத்தை விட, மனிதர்களால் உருவாகும் ஆலயமான திருஅவையை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.

பாதுகாத்தல் என்ற கருத்தைக் குறித்துப் பேசியத் திருத்தந்தை, கிறிஸ்தவ சமுதாயத்தை, தூய ஆவியாரின் ஆலயமாகப் பாதுகாப்பது அனைவரின் கடமை என்று எடுத்துரைத்தார்.

இறுதியாக, 'தூய்மைப்படுத்துதல்' என்ற கருத்தை முன்வைத்த திருத்தந்தை, சிறு கிறிஸ்தவ குழுமங்கள், தலத்திருஅவை, அகில உலகத் திருஅவை என்ற அனைத்து நிலைகளிலும் நாம் தூய்மை பெறவேண்டிய தேவையை உணரவேண்டும் என்று குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.