2017-11-08 14:40:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : எத்தியோப்பியாவில் கிறிஸ்தவம் -2


நவ.08,2017. புனித ஃபுருமென்சியுஸ் கி.பி. 308ம் ஆண்டு முதல் 380ம் ஆண்டுவரை வாழ்ந்தவர். இவர் எத்தியோப்பிய நாட்டில் நற்செய்தியை அறிவித்தார் என்று, கிறிஸ்தவ வரலாற்று ஆசிரியர் தீர் நகர் ரூஃபினுஸ் எழுதி வைத்துள்ளார். ஃபுருமென்சியுஸ் அவர்கள் ஒரு நாள், உரோமைப் பேரரசர்  கான்ஸ்ட்டடைன் அவர்களின் உறவினர் ஒருவரோடு எத்தியோப்பியா சென்று திரும்பிய வழியில் கப்பல் சேதம் அடைந்தது. அச்சமயத்தில் உரோமையர்களுடன் போர் நடந்தது. எனவே அந்தக் கப்பலில் பயணம் செய்த அனைவரும் கொலை செய்யப்பட்டனர். ஆனால் சிறுவர்களாக இருந்த ஃபுருமென்சியுஸ், அவரின் தோழர் எடிசியுஸ் ஆகிய இருவரும் பிணையல் கைதிகளாக, எத்தியோப்பிய அரசர் Aksumடம் அழைத்துச் செல்லப்பட்டனர். இவ்விருவரின் அழகில் மயங்கிய அரசர், இவர்களை தன் அரசவையில் வைத்து, அனைத்தையும் கற்றுக்கொள்ளச் செய்தார். பின் ஃபுருமென்சியுசுக்கு, அரண்மனையில் சொத்துக்களைக் கண்காணிக்கும் வேலையையும் கொடுத்தார் அரசர் Aksum. இவர் இறப்பதற்குமுன், இவர்கள் இருவருக்கும் விடுதலையும் அளித்தார். இவர்கள் தங்களின் சொந்த நாட்டிற்குச் செல்லவும் அனுமதியளிக்கப்பட்டனர். ஆனால் எத்தியோப்பிய அரசிக்கு இவர்களை நாட்டைவிட்டு அனுப்ப விருப்பமில்லை. எனவே  அவ்விருவரையும் அரண்மனையிலே வைத்துக்கொண்டார் அரசி. இவர்களும் அரசியின் விருப்பப்படி அந்நாட்டிலேயே தங்கினர். ஃபுருமென்சியுசை முதல் அமைச்சராக்கினார் அரசி.

அச்சமயத்தில், உரோமையர்களின் கிறிஸ்தவர்க்கெதிரான அடக்குமுறைகளுக்கு அஞ்சி, ஒரு சிறிய கிறிஸ்தவ சமூகம் எத்தியோப்பியாவில் அடைக்கலம் தேடியிருந்தது.  இந்நாட்டிலே தொடர்ந்து தங்குவதற்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, கிறிஸ்தவத்தைப் பரப்பும் முயற்சியில் இரகசியமாக ஈடுபட்டார் ஃபுருமென்சியுஸ். இவர், இரகசியமாகத் தரைவழிப் பயணங்களை மேற்கொண்டு கிறிஸ்தவத் தலைவர்களைச் சந்தித்தார். அலெக்சாந்திரியாவின் திருத்தந்தையாகப் பணியாற்றிய புனித அத்தனாசியுசைச் சந்தித்தார் ஃபுருமென்சியுஸ். எத்தியோப்பியாவில், நற்செய்தியைப் பரப்புவதற்கு ஓர் ஆயர் அனுப்பப்பட வேண்டுமென புருமென்சியுஸ் பரிந்துரைத்தார். அப்போது அத்தனாசியுஸ், ஃபுருமென்சியுஸ் அவர்களையே எத்தியோப்பியாவின் ஆயராக நியமித்தார். கி.பி.331ம் ஆண்டில் ஆயராக எத்தியோப்பியாவில் நுழைந்த அவரை அரசர் அன்போடு வரவேற்றார். அந்த அரசர் கிறிஸ்தவரல்ல. பத்து ஆண்டுகள் சென்று, அரசர்களின் ஆதரவோடு எத்தியோப்பிய அரசின் பெரும்பகுதி கிறிஸ்தவத்திற்கு மாறியதோடு, எத்தியோப்பியாவில் கிறிஸ்தவம், அதிகாரப்பூர்வ மதமாகவும் அறிவிக்கப்பட்டது. இவ்வாறு ரூஃபினுஸ் அவர்கள் எழுதியிருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.   

பின்னாளில் சிரியா மறைப்பணியாளர்களால் எத்தியோப்பியாவில் கிறிஸ்தவம் பரவியது. அந்நாட்டில், இவர்கள் கிறிஸ்தவ கல்வி மையங்களை அமைத்தனர். கிரேக்க மொழியிலிருந்த விவிலியத்தையும், கிறிஸ்தவம் சார்ந்த பிற நூல்களையும் எத்தியோப்பிய மொழியில், மொழி பெயர்த்தனர். இம்முயற்சி அந்நாட்டில் பொது மக்கள் மத்தியில் கிறிஸ்தவம் பரவ உதவியது. அதோடு பலர் துறவு வாழ்வையும் தேர்ந்தெடுத்தனர். ஆறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், எத்தியோப்பியாவின் வட பகுதி முழுவதும், கிறிஸ்தவ ஆலயங்கள் அமைக்கப்பட்டன. Aksum அரசப் பரம்பரையைச் சேர்ந்த அரசர் காலெப் என்பவர், தெற்கு அரேபியாவில் இடம்பெற்ற கிறிஸ்தவர்க்கெதிரான அடக்குமுறைகளுக்கு எதிராகச் சிலுவைப் போர் தொடுத்தார். மத்திய எத்தியோப்பியாவில் கிறிஸ்தவம் பரவுவதற்கு இந்த அரசரின் ஆட்சி பெரிதும் உதவியது. முஸ்லிம்கள் மத்தியிலும் கிறிஸ்தவம் தொடர்ந்து பரவியது. இவ்வாறு எத்தியோப்பியா, உலகில் தொன்மை கால கிறிஸ்தவ வரலாற்றைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. விவிலியத்தில் எத்தியோப்பியா என்ற சொல், 30க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளது (37 தடவைகள் King James version).

தற்போது எத்தியோப்பியாவில் பல்வேறு கிறிஸ்தவ சபைகள் உள்ளன. இவற்றில் எத்தியோப்பிய ஆர்த்தடாக்ஸ் Tewahedo கிறிஸ்தவ சபையே மிகப் பெரியதும், பழமையானதும் ஆகும். கீழை வழிபாட்டுமுறையைக் கொண்ட இச்சபை எத்தியோப்பியாவில் தனது தலைமை நிறுவனத்தைக் கொண்டிருக்கின்றது. 1959ம் ஆண்டுவரை, ஆர்த்தடாக்ஸ் Tewahedo சபை, அலெக்சாந்திரியாவின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் ஓர் அங்கமாக இருந்து வந்தது. பின் எத்தியோப்பிய Tewahedo சபை தனக்குரிய முதுபெரும் தந்தையைக் கொண்டிருப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டபின், தனித்தியங்க ஆரம்பித்தது. இச்சபையில், 4 கோடிக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் உள்ளனர். அதற்கடுத்த நிலையில் பிரிந்த கிறிஸ்தவ சபைகளின் உறுப்பினர்கள் உள்ளனர். கத்தோலிக்கர் ஐந்து இலட்சத்திற்கு மேல் உள்ளனர். ஆக, எத்தியோப்பியாவின் மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ அறுபது விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். மேலும், 33.9 விழுக்காட்டு முஸ்லிம்களும், 2.6 விழுக்காட்டு பாரம்பரிய மதங்களைப் பின்பற்றுகின்றவர்களும், யூதர்களும், இந்துக்களும், பாஹாய் மதத்தினரும், மத நம்பிக்கையற்றவர்களும் வாழ்கின்றனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.