2017-11-06 15:35:00

வாரம் ஓர் அலசல் – அதனதன் இடத்தில் அதது இருந்தால்..


நவ.06,2017. “புயலே புயலே இந்தமுறை சேதம் செய்யாதே, உதவி செய்ய அரசும் இல்லை. மக்களிடம் பணமும் இல்லை…”. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை வைத்து, இப்படி ஓர் அன்பர், பதிவு செய்துள்ளார். ஒரு நாள் மழையிலேயே சென்னை மிதக்கிறது. அடுத்து மழை வந்தால் என்னவாகுமோ என்ற மனஇறுக்கத்தில் மக்கள். ஆனால் தலைவர்களுக்கோ வேறு மாதிரியான மன இறுக்கங்கள். கட்சிகளைப் பற்றிய பதட்டம். இதற்கிடையே, கடும் எச்சரிக்கைக்கான பதிவு இது என்று, சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பரவியுள்ளது. அதாவது 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள், மீண்டும் சுனாமி, நிலநடுக்கம், இந்தமுறை முன்பைவிட "பலமடங்கு" அளவில் பெரியது. இது, 11 நாடுகளைக் கடுமையாக பாதிக்கக்கூடியது, குறிப்பாக தமிழ்நாடு, கேரளா என்பதுதான் அந்தத் தகவல் (Mr.Babu Kalayil). அப்பாவி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இத்தகவல் பற்றி, புவியியல் துறை பேராசிரியர் இளங்கோ அவர்கள், புதிய தலைமுறை தொலைக்காட்சி அலைவரிசையில் இவ்வாறு பேசியுள்ளார்.

நிலநடுக்கத்தை யாராலும் முன்கூட்டியே சொல்ல முடியாது. எனவே இந்த தகவல் பற்றி யாரும் அச்சப்படத் தேவையில்லை. இதைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கென இந்தியாவில், National Geophysical Research Institute இருக்கின்றது. பூமியிலுள்ள நிலத்தட்டுகள் மோதிக்கொள்வதாலேயே நிலநடுக்கம் ஏற்படுகின்றது. தமிழகம் மற்றும் தென் மாநிலங்கள், நிலத்தட்டுகளின் எல்லையில் அமைந்துள்ளன. சரியான ஆதாரம் இல்லாமல் மக்கள் எதையும் நம்ப வேண்டாம். இவ்வாறு புவியியல் துறை பேராசிரியர் இளங்கோ அவர்கள் சொல்லியுள்ளார்.

நவம்பர் 05, இஞ்ஞாயிறு சுனாமி விழிப்புணர்வு தினம். இப்புவியில் சுனாமி எப்போதாவது இடம்பெறும் நிகழ்வு எனினும், இதன் பாதிப்பு மிக மிகக் கடுமையானது. கடந்த நூறு ஆண்டுகளில் 58 சுனாமிகள் இடம்பெற்றுள்ளன. 2004ம் ஆண்டில், இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியால், இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து உட்பட 14 நாடுகள் பாதிக்கப்பட்டன. இதில், 2 இலட்சத்து 27 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இறந்தனர். இது நடந்து மூன்று வாரங்களுக்குப்பின், ஐ.நா. நிறுவனம், ஜப்பானின் Kobe நகரில் கூட்டம் நடத்தி, பேரிடர் ஆபத்தைத் தடுப்பது குறித்த உலகளாவிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கியது. அதோடு, இந்தியப் பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை அமைப்பு ஒன்றையும் உருவாக்கியது. மேலும், சுனாமி ஆபத்து உள்ள பகுதிகளின் நகரங்களில் மக்களின் குடியேற்றம் அதிகரிப்பதும், சுற்றுலாக்கள் வளர்வதும் அப்பகுதிவாழ் மக்களுக்கு ஆபத்தாக அமைகின்றன. எனவே பேரிடர்களால் மக்கள் உயிரிழப்பதைத் தவிர்க்கும் நோக்கத்தில், 2015ம் ஆண்டு டிசம்பரில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, நவம்பர் 05ம் தேதியை, உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக அறிவித்தது. இந்த உலக நாள் உருவாக்கப்பட முக்கியமாக செயல்பட்ட நாடு ஜப்பான். இந்த உலக நாளுக்கென குறிக்கப்பட்ட நவம்பர் 5ம் தேதியும், ஜப்பானிய விவசாயி ஒருவரை மகிமைப்படுத்தும் விதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1854ம் ஆண்டின் நிலநடுக்கத்தின்போது, ஜப்பானில் விவசாயி ஒருவர், கடலில் ஆழிப்பேரலைகள் பொங்கி வருவதைப் பார்த்து, தன் கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காக, அவர் தன் வயல் முழுவதிலுமிருந்த நெல் அரிக்கட்டுகளை எரித்தார். அவரது வயல் முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த நெருப்பைப் பார்த்து மக்கள், ஆபத்தை உணர்ந்து தப்பித்துக்கொண்டனர். பின், வருங்காலத்தில் சுனாமி பாதிப்பைத் தடுப்பதற்காக, கடலோரத்தில் கரையைக் கட்டி, மரங்களை நட்டார் அந்த விவசாயி.

சுனாமி இயற்கைப் பேரிடரின்போது ஏற்படும் உயிரிழப்புகளும், பொருள் சேதங்களும் கணக்கிலடங்காதவை. குழந்தைகள் பெற்றோரை இழக்கின்றனர். பெற்றோர் பிள்ளைகளை இழக்கின்றனர். இயற்கையால் நேரிடும் பேரிடர் இது. ஆனால் மனிதரின் பேராசை மற்றும் தீவிரவாதப் போக்குகளால் இடம்பெறும் பேரிடர்களாகிய சண்டைகளால் சுற்றுச்சூழலும் கடுமையாய் பாதிப்புக்கு உள்ளாகின்றது. போர்கள் இடம்பெறும்போது, உயிரிழந்த மற்றும் காயமடைந்த அப்பாவி பொது மக்கள், படைவீரர்கள், அழிக்கப்பட்ட நகரங்கள், வாழ்வாதாரங்கள் போன்றவையே பொதுவாகப் பேசப்படுகின்றன. ஆனால், சுற்றுச்சூழல், போரின் விளம்பரப்படுத்தப்படாத பலியாடாக உள்ளது. போரினால், நீர் ஆதாரங்கள், கிணறுகள், மாசடைகின்றன. அறுவடை தீ வைத்து கொளுத்தப்படுகின்றது. காடுகள் அழிக்கப்படுகின்றன. மண் நஞ்சாகின்றது. இராணுவத்திற்காக விலங்குகள் கொல்லப்படுகின்றன. கடந்த அறுபது ஆண்டுகளில் இடம்பெற்றுள்ள உள்நாட்டுச் சண்டைகளில் நாற்பது, இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதோடு தொடர்புடையவை. அதாவது, மரம், வைரம், தங்கம், எண்ணெய், வளமையான நிலம், தண்ணீர் போன்ற உயர்ந்த மதிப்புமிக்க வளங்கள் காரணமாகவே சண்டைகள் நடைபெற்றுள்ளன. இயற்கை வளங்களை மீட்பதற்காகவே இச்சண்டைகள் இடம்பெற்றன என்று, ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு (UNEP) கூறியுள்ளது. எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த செயல்திட்டம், போர்களைத் தடுத்து, அமைதியை நிலைநாட்டி அதனைக் கட்டியெழுப்பும் நோக்கத்தைக் கொண்டிருக்கின்றது. ஏனென்றால் மக்களின் வாழ்வாதாரங்களையும், சுற்றுச்சூழல் அமைப்பையும் காக்கும் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டால், நீடித்த அமைதி நிலவாது. எனவே, 2001ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி கூடிய ஐ.நா. பொது அவை, போர்கள் மற்றும் ஆயுத மோதல்களில், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கான உலக நாள், நவம்பர் 6ம் தேதியென அறிவித்தது. அதன்படி நவம்பர் 06, இத்திங்களன்று இந்த உலக தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

இந்த சமுதாயத்தில் எவரும் எதுவும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எல்லாமே சவுக்கியமாக, சுகமாக நலமாக இருக்கும். தாய் ஒட்டகம், தனது குட்டியிடம் சொன்னதுபோன்று, ஒவ்வொருவரும் அவரவருக்கு உரிய இடத்தில் இருந்து, அவரவர் கடமையை ஆற்றாமல் இருப்பதே, பிரச்சனைகளுக்கும், துன்பங்களுக்கும் காரணமாக அமைகின்றன. ஆசிரியர்கள் குருவாக, வழிகாட்டியாக இருப்பதில்லை. கல்விக்கூடங்களை, அறிஞர்கள் நடத்துவதில்லை. அரசியல்வாதிகள் தலைவர்களாக விளங்குவதில்லை. தலைவர்கள் தியாகங்களைச் செய்யத் துணிவதில்லை. தியாகிகள் ஆட்சிக்கு வரமுடிவதில்லை. ஆட்சியாளர்கள் வியாபாரியாகிவிட்டனர். வியாபாரி ஆட்சியாளராகிவிட்டார். ஞானமில்லாதவர் கல்வித்தந்தையாகிவிட்டார். கல்வி கடைச்சரக்காகி விட்டது. கடைச்சரக்கு கலப்படமாகிவிட்டது. எவரும், எதுவும் அதனிடத்தில் இல்லாமல், மற்றொன்றின் இடத்தில் நிற்பதால், சமுதாயம் சவுக்கியமாக இல்லாமல் இருக்கின்றது. இவ்வாறு ஒரு மேடைப் பேச்சாளர் சொன்னார். ஒவ்வொருவரும், பிறர்போல் இருக்க ஆசைப்படுவதால் நம் வீட்டுக்கண்ணாடி நம் முகத்தைக் காட்ட மறுக்கிறது என்று, கவியரசர் கண்ணதாசன் சொன்னார். ஒருவர் தனது உண்மை நிலையை அறிந்து, அதன்வழியில் முன்னேற முயற்சிக்காமல், பிறர் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தால் எப்படி வாழ்வில் முன்னேறுவது? பாலைவனத்து வாழ்வுக்கு எது பரிசோ அவை எல்லாம் பாலைவனத்தில் வாழாதபோது, அவற்றுக்கு அவ்வாழ்வு வெறும் சுமைகளே. வெறும் அவமானங்களே. வெறும் தண்டனைகளே. இவை, கடவுளின் வரம் மனிதரால் சாபமாக்கப்பட்ட கொடுமையின் சின்னங்கள். எனவே எப்போதும் இருக்க வேண்டிய இடத்தில் இருப்பதே வரம். எதுவும் இருக்கக்கூடாத இடத்தில் இருந்தால் வாழ்வே சுமை. தண்டனை.. சிறை அவமானம்.

செய்தித்தாள் ஒன்றில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது. சேவைமனப்பான்மை உள்ளவர் மருத்துவம் படிக்க விழைகிறார். ஆனால் அவரது பெற்றோர்கள் அவரை வியாபாரி ஆக்குகிறார்கள். வறுமையால், கவிஞர் எழுத்தாளராக்கப்படுகிறார். ஓவியர் ஊழியராக்கப்படுகிறார். பிறப்பிலேயே போதிப்பதில் வல்ல ஒருவர், ஆசிரியர் பணியில் ஆர்வமும் ஆசையும் உள்ள ஒருவர், குடும்பத்தின் நெருக்கடி காரணமாக பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர் ஆகிவிடுகிறார். சிறகுகளே சிறைகள். இந்தக் கொடுமையிலிருந்து விடுதலை அடையுங்கள். தலைமுடி, தலையில் இருந்தால்தானே அதற்குப் பெருமை. மீன் தண்ணீரில் இருந்தால்தான் அதற்கு வாழ்வு. எனவே, அந்தந்த இடங்களில், அதற்கு தகுதியுள்ளவர்கள் அமர்ந்தால்தான் அந்த இடம் செழிப்படையும், முன்னேறும். வேர்கள் ஆழமாக இருந்தால் எந்தப் புயலுக்குமே அஞ்சத் தேவையில்லை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.