2017-11-06 16:29:00

பேராயர் பியர்பத்திஸ்தா பிஸ்ஸபாலாவுக்கு இத்தாலிய விருது


நவ.06,2017. இத்தாலியின் “Giorgio La Pira Città di Cassano” என்ற தேசிய விருது, 2018ம் ஆண்டில், எருசலேம் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகப் பணியாற்றும் பேராயர் பியர்பத்திஸ்தா பிஸ்ஸபாலா அவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை அப்போஸ்தலிக்க நிர்வாகியான பேராயர் பிஸ்ஸபாலா அவர்கள், புனித பூமியின் பல்வேறு மதக் குழுக்களுக்கிடையே உரையாடல் முயற்சிகளை ஊக்குவித்து, அமைதியை நிலைநாட்ட முயன்றதற்காக, அவருக்கு, இவ்விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கும், சமூக நலனுக்கும் உழைப்பவர்களுக்கென வழங்கப்படும் இவ்விருது, புனித பூமியில், அமைதி, உடன்பாடு, சகிப்புத்தன்மை, ஒப்புரவு, கலாச்சாரங்களுக்கிடையே கலந்துரையாடல், மதங்களிடையே நல்லிணக்கம் ஆகியவற்றை வளர்க்க அயராது உழைத்த பேராயர் பிஸ்ஸபாலா அவர்களுக்கு, வரும் ஆண்டு, மார்ச் 13ம் தேதி, இத்தாலியின் Cassano All’Ionio எனுமிடத்தில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இவ்விருதை, கர்தினால்கள் கமில்லோ ருயினி, சால்வத்தோரே மார்த்தினேஸ், குவால்தியேரோ பஸ்ஸெத்தி மற்றும் ஆயர் பிரான்செஸ்கோ சவீனோ ஆகியோர் பெற்றுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.