2017-11-04 10:12:00

பாண்டிச்சேரி முன்னாள் பேராயர் மைக்கிள் அகுஸ்தின் மறைவு


நவ.04,2017. பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் மைக்கிள் அகுஸ்தின் அவர்கள், நவம்பர் 04, இச்சனிக்கிழமையன்று இயற்கை எய்தினார் என்பதை, ஆழ்ந்த கவலையுடன் அறிவிக்கின்றோம்.

1933ம் ஆண்டில் கோவிலானூரில் பிறந்த பேராயர் மைக்கிள் அகுஸ்தின் அவர்கள், 1961ம் ஆண்டு, பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்திற்காக அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். பாரிஸ் கத்தோலிக்க நிறுவனத்தில் மெய்யியலில் முதுகலைப்பட்டம் பெற்ற இவர், 1965ம் ஆண்டில், பெங்களூரு புனித பேதுரு குருத்துவ கல்லூரியில் பேராசிரியராக இணைந்தார். பின் அக்கல்லூரியின் அதிபராக, 1974ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். பின், 1978ம் ஆண்டில், சென்னை-மயிலாப்பூர் உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக, தனது 45வது வயதில் நியமிக்கப்பட்டு பணியாற்றிய இவர், 1981ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி வேலூர் மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டார்.

அதன்பின், 1992ம் ஆண்டு பிப்ரவரி 18ம் நாள், பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டு, 2004ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி பணி ஓய்வு பெற்றார், மறைந்த பேராயர் மைக்கிள் அகுஸ்தின்.

இவர் வேலூர் ஆயராக, பத்து ஆண்டுகள் 11 மாதங்கள் பணியாற்றிய காலத்தில், ஏறத்தாழ நூறு ஆலயங்கள் மற்றும் சிற்றாலயங்களைக் கட்டியுள்ளார். ஏழு புதிய பங்குகளையும், மூன்று உயர்நிலைப்பள்ளிகளையும் உருவாக்கியுள்ளார். ஐந்து ஆரம்பப் பள்ளிகளை, நடுத்தரப் பள்ளிகளாக உயர்த்தியிருக்கிறார். மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த, மாணவர்களுக்கு கோடை விடுமுறை பள்ளிகளையும் நடத்தியிருக்கிறார்.

மறைந்த பேராயர் மைக்கிள் அகுஸ்தின் அவர்களின் உடல், நவம்பர் 06, வருகிற திங்கள் காலை பத்து மணிக்கு பாண்டிச்சேரி அமலமரி பேராலயத்தில் நடைபெறும் திருப்பலிக்குப்பின், நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Ind.Sec/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.