2017-11-04 15:08:00

திருத்தந்தை, மோல்டோவா அரசுத்தலைவர் சந்திப்பு


அக்.04,2017. மோல்டோவா அரசுத்தலைவர் Igor Dodon அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

திருத்தந்தையைச் சந்தித்த பின், ஏனைய திருப்பீட அதிகாரிகளையும் சந்தித்துப் பேசினார், மோல்டோவா அரசுத்தலைவர் Dodon.   

மோல்டோவா குடியரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே தொடர்ந்து நிலவும் நல்லுறவுகள் பற்றி இச்சந்திப்புகளில் பேசப்பட்டது.

இன்னும், இச்சந்திப்பின்போது, மோல்டோவா அரசுத்தலைவர் Dodon அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மோல்டோவா நாட்டிற்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ருமேனியா நாட்டிற்கும், உக்ரைன் நாட்டிற்கும் இடையே அமைந்துள்ளது. மோல்டோவா நாடு, 1991ம் ஆண்டில் முன்னாள் சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து, தனி குடியரசு நாடானது. இந்நாடு, ஐரோப்பாவில், மிக வறுமைப்பட்ட நாடுகளில் ஒன்றாகும். இந்நாட்டிலுள்ள மூன்றில் இரண்டு பகுதி மக்கள், ருமேனியா நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள். 2004ம் ஆண்டின் நிலவரப்படி, இந்நாட்டு மக்களில் 93.3 விழுக்காட்டினர் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள்.

மேலும், இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் பக்கத்தில், ஆர்வத்தோடும், ஞானத்தோடும், நம்பிக்கை மற்றும் விசுவாசத்தைத் தூண்டுகின்ற, நற்செய்தியை அறிவிக்கும் விசுவாசிகள் திருஅவைக்குத் தேவை என்ற சொற்களை வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.