2017-11-03 13:45:00

சிரியாவில் கத்தோலிக்க காரித்தாஸின் பணிகள்


நவ.02,2017. சிரியா நாட்டின் தமஸ்கு நகரின் சுற்றுப்புறங்களில் காயமுற்றவர் யாராயினும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை, கத்தோலிக்க காரித்தாஸ் நடத்திவரும் மருத்துவமனைகள் செய்து வருகின்றன என்று, தமஸ்கு நகரில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றும் கர்தினால் மாரியோ செனாரி அவர்கள், ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

கடந்த இரு வாரங்களாக தமஸ்கு நகரைச் சுற்றி உருவாகியுள்ள தாக்குதல்களில் காயமுற்ற கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் அனைவருக்கும் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு ஆற்றிவரும் பணிகள் போற்றுதற்குரியன என்று கர்தினால் செனாரி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

சிரியாவின் துயர் துடைக்கும் பணிகளுக்கு திருத்தந்தை அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி கூறிய கர்தினால் செனாரி அவர்கள், அங்கு நிலவும் மருத்துவத் தேவைகளுக்கு பன்னாட்டு அரசுகளின் ஆதரவு மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

தமஸ்கு மற்றும் அலெப்போ நகரங்களில் இயங்கிவந்த மூன்று கத்தோலிக்க மருத்துவமனைகள், பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளானதால், அங்கிருந்த மருத்துவ வசதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன என்பதையும் கர்தினால் செனாரி அவர்கள் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.