2017-11-03 15:11:00

சண்டைகள் நிறுத்தப்படுவதற்கு,அரசியல் தீர்வுகள் அவசியம்


நவ.03,2017. உலகில் தங்களின் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாத வகையில், ஏராளமான மக்கள் புலம்பெயர்ந்துவரும்வேளை, உலகில் இடம்பெறும் சண்டைகள் நிறுத்தப்படுவதற்கு, அரசியல்முறைப்படி தீர்வுகள் காணப்படுமாறு, ஐ.நா.வின் புலம்பெயர்வோர் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

உலகின் பல பகுதிகளில் தங்களின் அனைத்து உடைமைகளையும் விட்டுவிட்டு புலம்பெயரும் இலட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்புக்கு, அரசியல் மட்டத்தில் தீர்வுகள் அவசியம் என்று, ஐ.நா. பாதுகாப்பு அவையில் கூறியுள்ளார், ஐ.நா.வின் புலம்பெயர்வோர் நிறுவனத்தின் தலைவர், பிலிப்போ கிராந்தி.

தற்போது உலக அளவில் புலம்பெயர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை 6 கோடியே 60 இலட்சத்தை எட்டியுள்ளது, இவ்வெண்ணிக்கை 2009ம் ஆண்டில் 4 கோடியே 20 இலட்சமாக இருந்தது என்றும் கிராந்தி அவர்கள் கூறினார்.

இந்த மக்களில் ஒரு கோடியே 72 இலட்சம் பேர், ஐ.நா.வின் புலம்பெயர்வோர் நிறுவனத்தின் பராமரிப்பில் உள்ளனர், இவ்வெண்ணிக்கை 2009ம் ஆண்டிலிருந்து 70 விழுக்காடு அதிகம் என்றும், கிராந்தி அவர்கள் மேலும் கூறினார்

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.