2017-11-03 11:31:00

இறைவனின் கரங்களில் உறங்கும் குழந்தையைப்போல்...


நவ.02,2017. "செபிக்கும்போது சில நேரங்களில் நான் தூங்கியிருக்கிறேன். அவ்வேளைகளில், இறைவனின் கரங்களில் உறங்கும் ஒரு குழந்தையைப்போல் உணர்ந்திருக்கிறேன்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்துள்ளார்.

TV2000 எனப்படும் இத்தாலிய தொலைக்காட்சியில், அருள்பணி மார்க்கோ போஸ்ஸா (Marco Pozza) அவர்களுடன் திருத்தந்தை மேற்கொண்ட ஓர் உரையாடல், நவம்பர் 1, இப்புதன் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானது.

செபிக்கும்போது தான் உறங்கினாலும், அதை விண்ணகத் தந்தை விரும்புகிறார் என்று, புனித குழந்தை தெரேசா கூறியதை, தன் நேர்க்காணலில் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதையொத்த எண்ணங்களை, "தாய் மடி தவழும் குழந்தையென" என்ற சொற்களில், திருப்பாடல் ஆசிரியரும் (திருப்பாடல் 131) கூறியுள்ளார் என்று சுட்டிக்காட்டினார்.

தந்தையின் கரங்களில் உறங்கும் குழந்தைகள்போல் வாழவேண்டிய கிறிஸ்தவர்கள், பதவி, அதிகாரம் ஆகியவற்றிற்காக எவ்விதம் போட்டியிட முடியும் என்று கேள்வியெழுப்பிய திருத்தந்தை, இத்தகையப் போட்டிகள், இறைவனின் திருப்பெயரை புனிதமாக்காது என்று எடுத்துரைத்தார்.

இத்தாலியின் பதுவை நகர் சிறையில் ஆன்மீகப் பணியாற்றும் அருள்பணி போஸ்ஸா அவர்களுடன் திருத்தந்தை மேற்கொண்ட இந்த நேர்க்காணல், "நமது தந்தை" என்ற பெயருடன், ஒரு நூலாக, நவம்பர் 23ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.