2017-11-03 14:40:00

ஆசியாவிலுள்ள கிறிஸ்தவர்களுக்காக திருத்தந்தை செபம்


நவ.03,2017.  “நாம் செபிக்கும்போது, நமக்கு துணிச்சலான விசுவாசம் தேவை. நம் செபங்களை ஆண்டவர் கேட்கின்றார் என்பதில் நம்பிக்கை வைக்க வேண்டும்” என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியாக, இவ்வெள்ளியன்று வெளியிட்டார்.

மேலும், இவ்வெள்ளியன்று, நவம்பர் மாத செபக்கருத்து பற்றிய சிந்தனைகளை, காணொளிச் செய்தியில் விளக்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆசியாவிலுள்ள கிறிஸ்தவர்கள், குறிப்பாக, பிற மதத்தவரோடு, உரையாடல், அமைதி, ஒருவரையொருவர் புரிந்துகொள்தல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென்று செபிப்போம் என்று கூறியுள்ளார்.

ஆசியாவிலுள்ள பல்வேறு மதங்கள், மரபுகள், பலதரப்பட்ட மக்கள், தொன்மைமிக்க கலாச்சாரங்கள் போன்றவை, தன்னை மிகவும் கவர்ந்துள்ளன என்றும், இக்கண்டத்தில் சிறுபான்மையாக இருக்கும் திருஅவையின் சவால்கள் ஆழமானவை என்றும் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையே நாம் உரையாடலை ஊக்குவிக்க வேண்டும் என்றும், ஆசியாவில் திருஅவையின் மறைப்பணியில் உரையாடல் முக்கிய அங்கம் வகிக்கின்றது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

ஆதலால், ஆசியாவிலுள்ள கிறிஸ்தவர்கள், உரையாடல், அமைதி, ஒருவரையொருவர் புரிந்துகொள்தல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென்று, இந்த நவம்பரில் நாம் சிறப்பாகச் செபிப்போம் என்று, காணொளிச் செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.