2017-10-31 15:39:00

கல்லறைகளை பிளாஸ்டிக் பொருள்களால் அலங்கரிக்க வேண்டாம்


அக்.31,2017. பிளாஸ்டிக் மற்றும், ஏனைய நச்சு கலந்த பொருள்களால் கல்லறைகளை அலங்கரிக்க வேண்டாமென்று, கோவா கத்தோலிக்கத் திருஅவை அதிகாரிகள் விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர். ,

நவம்பர் 02, வருகிற வியாழனன்று கடைப்பிடிக்கப்படும் இறந்தோர் நினைவு நாளில் கிறிஸ்தவர்கள் கல்லறைகளை அலங்கரித்து இறந்தவர்களுக்காகச் செபிக்கும்வேளை,    கல்லறை அலங்காரங்கள், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அமையுமாறு  திருஅவை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவா தலத்திருஅவையின் காரித்தாஸ் சமூகநல அமைப்பு அனைத்து பங்குக்குருக்களுக்கும், ஆன்மீக வழிகாட்டிகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், விசுவாசிகள், கல்லறைகளை அலங்கரிக்கும்போது, பிளாஸ்டிக் மற்றும் ஏனைய நச்சு கலந்த பொருள்களை, எல்லா நாள்களிலும், குறிப்பாக, இறந்தோர் நினைவு நாளில் தவிர்க்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

மக்கள் தங்களின் வாழ்வுமுறையை மாற்றியமைத்து, சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்பையும், பொருள்கள் வீணாக்கப்படுவதையும் குறைக்க வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில், கோவா காரித்தாஸ் அமைப்பு இம்முயற்சியில் இறங்கியுள்ளது.

அன்னை மரியா திருவுருவத்திற்கு, குடும்பங்களாக மரியாதை செலுத்தும்போதும், கூட்டங்களிலும், விழாக்களிலும் உண்வுப்பொருள்கள் பரிமாறப்படும்போதும் தேவையற்ற நச்சுகலந்து பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும், கோவா காரித்தாஸ் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

கோவா மாநிலத்தின் ஏறக்குறைய 15 இலட்சம் பேரில், மூன்றில் ஒரு பகுதியினர் கத்தோலிக்கர். 

ஆதாரம் : IANS /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.