2017-10-31 15:42:00

உகாண்டாவில் புதிய அர்ப்பணத்திற்கு கர்தினால் பிலோனி அழைப்பு


அக்.31,2017. உகாண்டா நாட்டின் தலைநகர் Kampalaவில், கடந்த ஐம்பது ஆண்டுகளில் தூதுரைப்பணியாளர்கள் ஆற்றிய சிறப்பான பணிகளின் பலன்களைக் காண முடிகின்றது என்றும், அடுத்த ஐம்பது ஆண்டுகள், விசுவாசம் மற்றும் பிறரன்பின் ஆழமான வளர்ச்சியின் காலமாக அமைய வேண்டும் என்றும், திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

Kampala உயர்மறைமாவட்டத்தின் பொன் விழாவுக்காக, அந்நகர் சென்று, பல்வேறு குழுக்களைச் சந்தித்து உரையாற்றிய, நற்செய்தி அறிவிப்பு பேராயத் தலைவர் கர்தினால் பெர்னான்டோ பிலோனி அவர்கள், அப்பகுதியில், வருங்காலத்தில் புதிய அர்ப்பணம் மற்றும் புதிய கூறுகளைக் காண விரும்புவதாகத் தெரிவித்தார்.

Kampalaவில் மேற்கொண்ட மூன்று நாள் மேய்ப்புப்பணி பயணத்தின் நிறைவாக, அக்டோபர் 29, இஞ்ஞாயிறன்று, உகாண்டா மறைசாட்சிகள் திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றிய கர்தினால் பிலோனி அவர்கள், அன்பு, ஒப்புரவு, நீதி மற்றும் அமைதிக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு, திருஅவையும், சமுதாயமும் இணைந்து செயல்படுமாறு விண்ணப்பித்தார்.

இந்தப் பொன் விழா, Kampala உயர்மறைமாவட்டத்தின் வாழ்வில் முக்கியமான நிகழ்வாக உள்ளது என்றும், அடுத்த 50 ஆண்டுகளுக்கு, கத்தோலிக்கத் திருஅவையின் பாதையில் புதிய கூறுகளை உருவாக்க இவ்விழா அழைப்பு விடுக்கின்றது என்றும்  கர்தினால் பிலோனி அவர்கள் கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.