2017-10-27 15:35:00

ஏராளமான கிறிஸ்தவர்கள் கொத்தடிமைகள், ஆயர் Mulakkal


அக்.27,2017. இக்காலத்திலும், ஏராளமான கிறிஸ்தவர்கள், குடும்பக் கடன்களுக்கென பண்ணையாளர்களிடம் கொத்தடிமைகளாக வேலை செய்கின்றனர் என்று, இந்திய ஆயர் ஒருவர் கவலை தெரிவித்தார்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் ஆயர் Franco Mulakkal அவர்கள், தனது நான்காண்டு ஆயர் பணி பற்றி யூக்கா செய்தியிடம் பகிர்ந்துகொண்டவேளை, கொத்தடிமைகளாக வேலைசெய்யும் குடும்பங்களை மீட்பதற்கு அருள்பணியாளர்கள் சிலர் உழைத்து வருகின்றனர் என்றும், மீட்கப்பட்ட இந்தக் குடும்பங்களுக்கு உளவியல் முறைப்படி உதவிகள் தேவைப்படுகின்றன என்றும் கூறினார்.

பஞ்சாப் மாநிலத்திலுள்ள 58 விழுக்காட்டு சீக்கியர்களில், அதிகமானவர்கள் பண்ணையாளர்களும், பணக்கார விவசாயிகளும் ஆவார்கள். மேலும் அம்மாநிலத்தில் 38 விழுக்காட்டினர் இந்துக்கள். கிறிஸ்தவர்கள் 1.1 விழுக்காட்டினர். இவர்களில் அதிகமானோர் ஏழை தலித்துக்கள் என்று செய்திகள் கூறுகின்றன. 

மேலும், இந்தியாவில் ஏனையப் பகுதிகளிலுள்ள கிறிஸ்தவர்களைவிட பஞ்சாப் மாநிலத்திலுள்ள கிறிஸ்தவர்கள், நகர்ப்புறத்தில் வாழ்பவர்கள், படித்தவர்கள் மற்றும் முன்னேறியவர்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.