2017-10-26 15:53:00

ஸ்காட்லாந்து கிறிஸ்தவ சபை பிரதிநிதிகள் சந்திப்பு


அக்.26,2017. பிரிவினைக்கு இட்டுச்செல்லும் கூறுகளைப் பின்னுக்குத் தள்ளுகின்ற மற்றும் கடந்தகாலக் காயங்களைக் குணமாக்குகின்ற தாழ்மையான பிறரன்பு பாதையில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம், இதுவே நற்செய்தி அறிவிப்புக்கு இன்றியமையாதது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஸ்காட்லாந்து கிறிஸ்தவ சபை பிரதிநிதிகளிடம், இவ்வியாழனன்று கூறினார்.

லூத்தரன் சீர்திருத்தம் இடம்பெற்றதன் 500ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடந்த ஆண்டில் (அக்.31-நவ.1,2016) சுவீடன் நாட்டின் Lund நகரில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டதை நன்றியுடன் நினைவுகூர்ந்த திருத்தந்தை, கிறிஸ்தவ சபைகள் மத்தியில் இடம்பெறும் கடந்தகால கசப்பான நினைவுகளைத் தூய்மைப்படுத்தும் முயற்சிகள், அச்சபைகள் ஒன்றிணைந்து பயணிப்பதன் மிகவும் குறிப்பிடத்தக்க கனிகளாக உள்ளன என்றும் கூறினார்.

எந்த ஒரு கிறிஸ்தவரும், பிறரின்றி கிறிஸ்தவராக வாழ முடியாது என்றும், நாம், விசுவாசிகள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவ்வியாழன் காலையில் திருப்பீடத்தில் சந்தித்த, ஸ்காட்லாந்து கிறிஸ்தவ சபை பிரதிநிதிகளிடம் கூறியத் திருத்தந்தை, இயேசுவின் பெயரால் இக்காலத்தில் பெரும் சோதனைகளையும், துன்பங்களையும் அனுபவிக்கும் கிறிஸ்தவர்கள் பற்றியும், இவர்களின் துன்பங்களைக் களைவதற்கு கிறிஸ்தவ சபைகள் ஒன்றிணைந்து செயல்பட உந்தப்படுகின்றன என்றும்   எடுத்துச் சொன்னார்.

ஸ்காட்லாந்து கிறிஸ்தவ சபையும், கத்தோலிக்கத் திருஅவையும், காணக்கூடிய விதத்தில் ஒன்றிப்பை நோக்கிச் செல்லும் பயணம் ஒவ்வொரு நாளும் தொடரும் மற்றும், அண்மைக் கடந்தகாலத்தில் இடம்பெற்றதுபோன்று, வருங்காலத்திலும் மிகுந்த வளமான பலன்களைக் கொணரும் என்ற தன் நம்பிக்கையும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.