2017-10-26 15:36:00

தீமைக்கு எதிராய்ப் போராடாதவர் கிறிஸ்தவரே அல்ல


அக்.26,2017. நம் வாழ்வையும், பாதைகளையும் மாற்றி, நாம் மனம் மாற வேண்டுமென்று  இயேசு விடுக்கும் அழைப்பு, தீமையை, நம் இதயங்களிலுள்ள தீமையைக்கூட எதிர்த்துப் போராட வேண்டும் என்பதாகும், இந்தப் போராட்டம் எளிதானதல்ல, ஆனால் இது நமக்கு அமைதியை நல்கும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலையில் மறையுரையாற்றினார்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில், இவ்வியாழன் காலையில் நிறைவேற்றிய திருப்பலியில், மண்ணுலகில் தீமூட்ட வந்தேன் என்று இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறிய நற்செய்தி வாசகத்தை (லூக்.12,49-53) மையப்படுத்தி மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு இம்மண்ணுலகில் மூட்டிய தீ, மாற்றத்திற்கு அழைப்பு விடுக்கும் தீயாகும், உலகப் போக்குகொண்ட நமது சிந்திக்கும் முறையையும், உணர்வு கொள்ளும் முறையையும் மாற்றும்போது, நம் இதயம், கிறிஸ்துவின் வல்லமையோடு கிறிஸ்தவ இதயமாக மாறுகின்றது, இதுவே மனமாற்றம் என்றும் திருத்தந்தை மறையுரையில் கூறினார்.

மனமாற்றத்தில், உடலும் மனமும் எல்லாமுமே ஈடுபட்டுள்ளது என்று விளக்கிய திருத்தந்தை, இந்த மாற்றத்தை தூய ஆவியார் நமக்குள்ளிலிருந்து ஏற்படுத்துகிறார் என்றும், தூய ஆவியார் செயல்படுவதற்கு வசதியாக, இந்தப் போராட்டத்தை நமக்குள்ளதாக ஆக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.

இவ்வாறு தீமைக்கு எதிராய்ப் போராடாத, சுலபமான வாழ்வு நடத்தும் கிறிஸ்தவர்,  கிறிஸ்தவரே அல்லர் என்றும், இத்தகைய சுலபமான வாழ்வு வாழ்கின்றோமா என்பது பற்றி ஆன்ம பரிசோதனை செய்வது உதவியாக இருக்கும் என்றும், மனம் மாறுவதற்கு, தாராள மற்றும் விசுவாச இதயம் தேவை என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.