2017-10-25 16:15:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : அர்மேனியாவும் கிறிஸ்தவமும் - 3


அக்.25,2017. அர்மேனியா நாட்டில் கி.பி.301ம் ஆண்டில், கிறிஸ்தவம் அரசு மதமாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், அர்மேனியா, உலக வரலாற்றில் முதல் கிறிஸ்தவ நாடாக மாறியது. இதற்கு காரணமாக இருந்தவர், ஒளிரச் செய்பவரான புனித கிரகரி. காரணியாக இருந்த நிகழ்வு, அர்மேனிய அரசர் மூன்றாம் Tiridatesன் மனமாற்றம். இந்த அரசரின் செயலரான Agathangelos என்பவர், 5ம் நூற்றாண்டில் எழுதிய “அர்மேனியர்களின் வரலாறு”என்ற நூலிலிருந்து, அரசர் மூன்றாம் Tiridatesன் மனமாற்றம் பற்றி அறிகிறோம். புனித கிரகரி அவர்கள், மிகவும் மதிப்புமிக்க உயர் குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தந்தை Anak என்பவர், முதலாம் Ardashir என்பவரின் ஆணைப்படி, அர்மேனிய அரசர் 2ம் Khosrov என்பவரை, கி.பி. 252ம் ஆண்டில் கொலை செய்தார். இவரின் மரணத்தையடுத்து, இவரின் மகன் மூன்றாம் Tiridates ஆட்சியில் அமர்ந்தார். Tiridates, கிரகரியின் அப்பா, இன்னும் அவர் குடும்பத்தினர் பலரைத் தூக்கிலிட்டார். அச்சமயத்தில் குழந்தையாக இருந்த கிரகரி, இந்தப் படுகொலைகளிலிருந்து தப்பிக்க வைக்கப்பட்டார். கிரகரி, செசாரியாவில் கிறிஸ்தவக் குடும்பம் ஒன்றில் கிறிஸ்தவராக வளர்க்கப்பட்டார். தனது தந்தையின் தவறை அறிந்து வருந்தி, மீண்டும் அர்மேனியா சென்று இராணுவத்தில் சேர்ந்தார். அரசருக்கும் செயலராகப் பணியாற்றினார் கிரகரி. 

அர்மேனியாவில் மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் கிறிஸ்தவம் உறுதியாக வேரூன்றியிருந்தாலும், பெருமளவான நாட்டு மக்கள் பல கடவுள்களை வழிபட்டு வந்தனர். இதற்கு அரசர் Tiridatesம் விதிவிலக்கல்ல. இந்த அந்நிய தெய்வ வழிபாட்டின்போது ஒருநாள் அரசர், கிரகரியிடம், Erizaவின் Anahit என்ற பெண் தெய்வத்தின் காலடிகளில் மலர் சூட்டுமாறு ஆணையிட்டார். ஆனால் கிரகரி, தனது கிறிஸ்தவ விசுவாசத்தை அறிவித்து, அரசரின் ஆணைக்கு அடிபணிய மறுத்துவிட்டார். அரசருக்குக் கோபம் கொப்பளித்தது. அங்கு சுற்றி நின்றவர்கள், கிரகரி, உம் தந்தையைக் கொன்றவனின் மகன், ஒரு துரோகி என்று கூச்சலிட்டனர். இதனால் அரசரின் கோபம் கட்டுக்கடங்காமல் போனது. கிரகரியை பிடித்து கொடுமையாய் சிதர்வதை செய்து கடைசியில், ஒரு பாழடைந்த பாதாள இருட்டறையில் தூக்கிப்போட்டனர். இதற்கிடையே, கிரகிரி கைது செய்யப்பட்டிருந்த ஆண்டுகளில், உரோமையரின் கிறிஸ்தவர்க்கு எதிரான அடக்குமுறைகளுக்கு அஞ்சி, Gayane என்பவரின் தலைமையில் ஒரு கன்னியர் குழு அர்மேனியாவுக்கு வந்தது. அரசர் Tiridates, இந்தக் குழு பற்றிக் கேள்விப்பட்டார். இவர்களில் மிகவும் அழகாக இருந்த Rhipsime என்பவர் தன்னை மணந்து கொள்ளுமாறு அரசர் வற்புறுத்தினார். அக்கன்னிப்பெண் மறுக்கவே, அந்தக் குழுவினர் எல்லாரையும் அரசர் சித்ரவதை செய்து கொன்று போட்டார்.

இந்த வன்முறைக்குப்பின், அரசர் ஒருவித அபூர்வ கடும் நோயால் தாக்கப்பட்டார். காட்டில் தான்தோன்றித்தனமாகச் சுற்றித் திரியும் கொடிய ஆண் பன்றி போன்று அரசரின் நடத்தை மாறியது. அச்சமயத்தில் Khosrovidukht என்பவர், பாதாள இருட்டறையில் எறியப்பட்ட கிரகரியால் மட்டுமே அரசருக்கு குணமளிக்க முடியும் என்று, ஒரு கனவு கண்டார். அச்சமயத்தில் கிரகரியை சிறையில் அடைத்து 13 ஆண்டுகள் ஆகியிருந்தன. அவர் உயிரோடு இருப்பாரா என்பதில் பலருக்கு சந்தேகம். ஆனால் கிரகரி மிகவும் உடல் மெலிந்து, உயிரோடு இருப்பதைப் பார்த்து எல்லாரும் வியந்தனர். 13 ஆண்டுகளாக, கனிந்த இதயமுடைய ஒரு கைம்பெண் ஒவ்வொரு நாளும் ரொட்டித்துண்டை இரகசியமாக அச்சிறையில் கிரகரிக்கு எறிந்து வந்தார் என்பதே, கிரகரி உயிரோடு இருப்பதற்கு காரணம். கிரகரி இருட்டறையிலிருந்து மீட்கப்பட்டார். அரசர் Tiridates, கிரகரியிடம் அழைத்துவரப்பட்டார். அவரும் அரசரை அற்புதமாய் குணமாக்கினார். இது நடந்தது கி.பி. 301ம் ஆண்டில். தான் குணமடைந்த சக்தியினால் உந்தப்பட்டவராய், உடனடியாக அரசர், கிறிஸ்தவத்தை அரசு மதமாக அர்மேனியாவில் அறிவித்தார். இவ்வாறு அர்மேனியா கிறிஸ்தவ நாடானது. அர்மேனிய அப்போஸ்தலிக்க திருஅவையின் தலைவராக, கிரகரியையும் நியமித்தார் அரசர் Tiridates.

பல கடவுள்கள் வழிபாடு ஆழமாக வேரூன்றியிருந்த அர்மேனியாவில், உடனடியாக எல்லாரும் கிறிஸ்தவத்தை ஏற்பது அவ்வளவு எளிதாக இல்லை. இதனால் அரசர் Tiridates, குடிமக்கள் அனைவரையும் கட்டாயப்படுத்தினார். அரசரின் படைகளுக்கும், பலகடவுள்கள் குழுவுக்கும் இடையே ஆயுதம் ஏந்திய பல சண்டைகளும் நடந்தன. அரசர் Tiridates, தனது பிற்கால வாழ்வை, பழங்கால நம்பிக்கைகளையும், எண்ணற்ற சிலைகளையும் கோவில்களையும், எழுத்துப் பிரதிகளையும் அழிப்பதில்  செலவிட்டார். அரசர் மிகவும் உறுதியுடன் கிறிஸ்தவ விசுவாசத்தைப் பரப்பி, கி.பி.330ம் ஆண்டில் இறந்தார். அரசர் Tiridatesஐ எதிர்த்த குடும்பங்கள், இவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து, விஷம் கொடுத்து இவரைக் கொன்றனர் என்று சொல்லப்படுகிறது.

அர்மேனிய அப்போஸ்தலிக்க திருஅவை மற்றும் கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் சபைகளில், அரசர் 3ம் Tiridates, Ashkhen, Khosrovidukht ஆகியோர் புனிதர்களாகப் போற்றப்படுகின்றனர். இவர்களின் திருவிழா, பெந்தக்கோஸ்து விழாவுக்குப்பின் ஐந்தாம் ஞாயிறையடுத்த சனிக்கிழமையில் சிறப்பிக்கப்படுகின்றது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.