2017-10-25 16:46:00

உலக சிறார் தினத்தில் நலிந்த சிறார்க்காக சிறாரே குரல்


அக்.25,2017. இன்னும் ஒரு மாத காலத்தில், ஊடகம், அரசியல், தொழில், விளையாட்டு பொழுதுபோக்கு போன்ற எல்லாத் துறைகளிலும், உலகிலுள்ள சிறார், கல்விவாய்ப்பற்ற, பாதுகாப்பற்ற மற்றும் புலம்பெயர்ந்த, தங்கள் வயதையொத்த இலட்சக்கணக்கான சிறார்க்காக குரல் எழுப்புவார்கள் என்று, ஐ.நா.வின் குழந்தை நல யுனிசெப் நிறுவனம் இச்செவ்வாயன்று அறிவித்தது.

சிறார் உரிமைகள் ஒப்பந்தம் அமலுக்கு வந்த நவம்பர் 20ம் தேதி உலக சிறார் தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது, அந்நாளில், உலகிலுள்ள அனைத்துச் சிறாரும் தங்களின் பள்ளிகள் மற்றும் சமூகங்களில், சிறாரின் வாழ்வைப் பாதுகாக்கவும், அவர்களின் உரிமைகளுக்காகப் போராடவும், அவர்களின் திறமைகள் பயன்படுத்தப்படவும் குரல் கொடுக்க வேண்டும் என்று யுனிசெப் கேட்டுக்கொண்டுள்ளது.

உலக சிறார் தினம், சிறார்களால் சிறார்க்காக நடத்தப்பட வேண்டியது என்றும், அந்நாளில், சிறார், சமூகத்தில் நலிந்த சிறார்க்காக குரல் எழுப்புவார்கள் என்றும் யுனிசெப் நிறுவனத்தின் உதவி இயக்குனர் Justin Forsyth அவர்கள் கூறினார்.

உலக சிறார் தினத்தில், உலகின் முக்கிய பிரபலங்களும், தலைவர்களும் சிறார்க்காகப் பரிந்து பேசுவார்கள் என்று, Forsyth அவர்கள் கூறினார்.

உலகில் 38 கோடியே 50 இலட்சம் சிறார் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர், 26 கோடியே 40 இலட்சம் சிறாரும், இளையோரும் பள்ளிக்குச் செல்லவில்லை, 5 வயதுக்குட்பட்ட 56 இலட்சம் சிறார், தடுத்து நிறுத்தக்கூடிய நோய்களால் கடந்த ஆண்டில் இறந்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.