2017-10-25 16:27:00

அமைதியின் பாதையைத் தேர்ந்தெடுங்கள், கென்யர்களுக்கு சூடான்


அக்.25,2017. கென்ய நாடு, நிச்சயமற்ற ஓர் அரசியல் சூழலை எதிர்கொள்ளும் இவ்வேளையில், சூடான் மற்றும் தென் சூடான் திருஅவைகள், கென்ய நாட்டினருடன் ஒருமைப்பாட்டுணர்வு கொள்வதாகவும், கென்ய மக்கள் அமைதியின் பாதையைத் தேர்ந்துகொள்ளுமாறு அத்திருஅவைகள் விண்ணப்பிக்கின்றன எனவும் கூறியுள்ளார், கென்ய ஆயர் பேரவைத் (KCCB) தலைவர் ஆயர் Philip Anyolo.

எண்ணற்ற துன்பங்களையும், கடின வாழ்வையும் எதிர்கொண்ட சகோதர சகோதரிகளிடமிருந்து இத்தகைய ஆறுதலான செய்தி வந்திருப்பது, கிறிஸ்துவின் தூதுரைப்பணியில் நாம் எல்லாரும் அன்புடனும், ஒன்றிப்புடனும் இருப்பதையே காட்டுகின்றது என்று, ஆயர் Anyolo அவர்கள் பீதேஸ் செய்திக்கு அனுப்பிய கடிதம் கூறுகின்றது.

சூடான் ஆயர் பேரவைத் (SCBC) தலைவர் ஆயர் Barani Eduardo Hiiboro Kussala அவர்கள், கென்யத் திருஅவைக்கு, ஆறுதலான இச்செய்தியை அனுப்பியுள்ளார்.

2011ம் ஆண்டில் புதிய சுதந்திர நாடாக உதித்த தென் சூடான், 2013ம் ஆண்டில் மீண்டும் கடும் வன்முறைக்கு உள்ளாகி, கடும் துன்பங்களை அனுபவித்து வருகிறது, இந்நாள்வரை பிரச்சனைக்குத் தீர்வுகள் காணப்படவில்லை, இலட்சக்கணக்கான சூடான் புலம்பெயர்ந்த மக்களை, கென்யர்கள் வரவேற்றுள்ளனர், கென்யா எங்களின் இல்லம், அந்நாட்டிற்கு அமைதி அவசியம் என்று, சூடான் ஆயர் Barani அவர்கள், தான் அனுப்பிய கடிதத்தில் எழுதியுள்ளார். கென்யாவில் பொதுத் தேர்தலைத் தள்ளிப்போடுவது குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, அக்டோபர் 25, இப்புதனன்று வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.  

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.