2017-10-24 16:18:00

தென் கொரியாவில் பிறப்பு விகிதம் குறைவு, ஆயர்கள் கவலை


அக்.24,2017. தென் கொரியாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள அதேவேளை, கடின உழைப்பு ஊக்கப்படுத்தப்படாமல், சமுதாயத்தில் விதிமுறைகளே ஆதிக்கம் செலுத்துகின்றன என்று, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் குறை கூறியுள்ளனர்.

தென் கொரியாவில் நிலவும் தற்போதைய பிரச்சனைக்கு ஒரே தீர்வு, எல்லாரையும் உடன்பிறந்த உணர்வோடு வாழத் தூண்டும் நற்செய்தியின்படி வாழ்வதே என்று, தென் கொரிய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி பணிக்குழு தலைவர் ஆயர் Lazarus You Heung-sik அவர்கள் கூறினார்.

இது குறித்து ஆசியச் செய்தியிடம் மேலும் பேசிய, Daejeon ஆயர் Lazarus அவர்கள், பிறப்பு விகிதம் குறைவதற்கான பிரச்சனை, ஒருவர் பிறரோடு வாழ்வதற்கு கற்றுக்கொள்ளும் முதல் பள்ளியாகிய குடும்பங்களில் முதலில் ஆரம்பிக்கின்றது என்றும், மனிதத்தில் வளர்ப்பது குறைந்து வருகின்றது என்றும் கூறினார்.

இதற்கிடையே, தென் கொரியாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள அந்நாட்டு அதிகாரிகள், இந்நிலை, பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து இடம்பெறுவதற்கு இடையூறாக அமையும் என்று எச்சரித்துள்ளனர்.

தென் கொரியாவில், கடந்த ஆண்டில் பிறப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது என்றும், நான்கு இலட்சத்து ஆறாயிரம் குழந்தைகளே பிறந்தனர் என்றும், கடந்த ஏழு ஆண்டுகளில் இது மிகக் குறைவு என்றும் செய்திகள் கூறுகின்றன. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.