2017-10-24 15:19:00

திருத்தந்தை : இயேசு கிறிஸ்துவின் பேருண்மையில் நுழையுங்கள்


அக்.24,2017. இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவருக்கும் யார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு, அவரின் பேருண்மையில் நுழைய வேண்டும் என்று, வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில், இச்செவ்வாய் காலை நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திருப்பலியின் முதல் வாசகமான, புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடல் பகுதியை மறையுரையில் விளக்கிய திருத்தந்தை, இயேசு கிறிஸ்து என்னை அன்புகூர்ந்து, மரணம் வரை எனக்காகத் தம்மைக் கையளித்தார் என்பதே, இயேசு கிறிஸ்துவின் பேருண்மையின் மையம் என்று கூறினார்.

நம் ஆண்டவரின் திருப்பாடுகளாகிய சிலுவைப்பாதை பற்றிப் பேசிய திருத்தந்தை, திருப்பலிக்குச் செல்வது, செபிப்பது, நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்வது போன்றவை நல்லது, ஆயினும், இயேசு கிறிஸ்துவின் பேருண்மையில் நுழைந்துள்ளோமா என்பதே முக்கியமான கேள்வி என்றும் திருத்தந்தை மறையுரையில் கூறினார்.

புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலில், பாவம், கீழ்ப்படியாமை, அருள், மன்னிப்பு போன்றவை பற்றி நாம் புரிந்துகொள்வதற்கு முயற்சித்துள்ளார் என்றும், இவை எல்லாவற்றிக்கும் பின்னால் மீட்பின் வரலாறு உள்ளது என்றும், கிறிஸ்து பற்றி விளக்குவதற்கு போதுமான வார்த்தைகள் இல்லை என்பதால், கிறிஸ்துவின் பேருண்மையில் அவர் நம்மை நுழையச் செய்துள்ளார் என்றும் திருத்தந்தை கூறினார்.

மற்றுமோர் பகுதியில், இயேசு கிறிஸ்து என்னை அன்புகூர்ந்தார், எனக்காகத் தம்மைக் கையளித்தார் என்று இயேசுவைப் பார்த்து பவுலடிகளார் சொல்வதன் வழியாக, கிறிஸ்துவின் பேருண்மையில் அவர் நம்மை நுழையச் செய்கிறார் என்றும் கூறியத் திருத்தந்தை, கிறிஸ்துவின் பேருண்மையில் நுழைவது என்பது, அவரின் இரக்கப்பெருக்கில் மூழ்குவதாகும் என்றார்.

இயேசு எனக்கு யார் என்று ஒருவரிடம் கேட்டால், கடவுளின் மகன் என்று விசுவாச அறிக்கையிலும், மறைக்கல்வியிலும் இருப்பதைச் சொல்லலாம் என்றுரைத்த திருத்தந்தை, கிறிஸ்துவின் பேருண்மையை, அவரின் அருளால் மட்டுமே புரிந்துகொள்ள இயலும் என்று கூறினார். இதற்கு சிலுவைப்பாதை பக்திமுயற்சி நமக்கு உதவும், இதனை வீட்டில் செய்யலாம், புனிதர்கள் தங்களின் ஆன்மீக வாழ்வை சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவின் பேருண்மையைத் தியானித்ததிலிருந்து தொடங்கினர், வரலாற்றின், நம் வாழ்வின் மையமான சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவை நோக்குவோம் என்று சொல்லி, மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.