2017-10-24 15:27:00

அமைதியை ஊக்குவிக்க, மனித உரிமைகள் மதிக்கப்பட உழைப்போம்


அக்.24,2017. “மக்கள் மத்தியில் அமைதியை ஊக்குவிக்கவும், மனித உரிமைகள் மதிக்கப்படுவதை உறுதி செய்யவும், நாம் எல்லாரும் ஒன்றுசேர்ந்து உழைப்போம்” என்று, இச்செவ்வாயன்று கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 24, இச்செவ்வாயன்று ஐக்கிய நாடுகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டவேளை, திருத்தந்தையும், அத்தினத்திற்கென தன் டுவிட்டரில் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், இத்தினத்திற்கென காணொளிச் செய்தியில் பேசியுள்ள ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள், இன்றைய உலகின் பிரச்சனைகள் எல்லைகளைக் கடந்து சென்றுள்ளன, எனவே, நம் வருங்காலத்தை மாற்றுவதற்கு, வேறுபாடுகளைக் கடந்து நாம் செயல்படவேண்டுமென விண்ணப்பித்துள்ளார்.

கடும் காலநிலை மாற்றம், சகிப்பற்றதன்மையால் ஏற்படும் மரணங்கள், அணு ஆயுதங்கள் உட்பட பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் போன்ற பெரிய சவால்களை நாம் எதிர்கொள்ளும் இக்காலத்தில், நாமே மக்கள் என்ற கண்ணோட்டத்தை உண்மையாக்குவோம் என்றும், கூட்டேரெஸ் அவர்கள் கூறியுள்ளார்.

1945ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் நிர்வாக விதிமுறை ஆவணம் அமலுக்கு வந்ததையடுத்து, அந்நிறுவனம் செயல்படத் தொடங்கியது. ஐக்கிய நாடுகள் தினம் அதாவது ஐ.நா. தினம், 1948ம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்படுகின்றது.

ஐ.நா.வின் நோக்கங்களையும், சாதனைகளையும் உலகெங்கும் எடுத்துக் கூறுவது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். ஐ.நா. நிறுவனத்திற்கு முன்னரே, இது போன்ற பல பன்னாட்டு அமைப்புகள் உருவாகியிருந்தன. முதல் உலகப் போருக்குப் பின், 1919ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு (League of Nations), அவற்றுள் முக்கியமானதாகும். இந்த அமைப்பும் உலகில் அமைதியைக் காத்தல் என்ற முக்கிய நோக்கத்தைக் கொண்டிருந்தாலும், அதனால் தனது செயல்பாட்டை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியவில்லை. ஏனெனில் இதில் அனைத்து நாடுகளும் அங்கம் வகிக்கவில்லை. இதில் ஏற்பட்ட தோல்வியே இரண்டாம் உலகப் போருக்குக் காரணமாக அமைந்தது.

‘ஐக்கிய நாடுகள்’என்ற பெயரை முன்மொழிந்த அமெரிக்க ஐக்கிய நாட்டின் முன்னாள் அரசுத்தலைவர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்த உலக நாடுகளின் அமைப்புக்கு, ‘ஐக்கிய நாடுகள்’என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.