2017-10-23 16:10:00

தெல் அவிவ் பல்கலைக்கழக குழுவினருக்கு திருத்தந்தை வாழ்த்து


அக்.23,2017. இஸ்ரேல் நாட்டுத் தலைநகர் தெல் அவிவ் பல்கலைக்கழகத்தின், முப்பது பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவையும், இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்கலைக்கழகங்கள் ஞானத்தின் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் சவாலைக் கொண்டுள்ளன என்று கூறினார்.

தெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் Joseph Klafter அவர்களின்  வாழ்த்துரைக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை, அறிவும், ஞானமும் ஒன்றுசேர்ந்து முன்னோக்கிச் செல்ல வேண்டியவை என்றும், வருங்காலத் தலைமுறைகள் மீது முற்சார்பு எண்ணங்களின்றி, இக்காலத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் புதிய பாதைகளைக் காணும் தலைவர்களை, பல்கலைக்கழகங்கள் உருவாக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

நம் சமுதாயங்கள் எதிர்கொள்ளும் நன்னெறி விவகாரங்களைக் கவனத்தில் கொண்டு, மிகவும் நலிந்த சகோதர சகோதரிகளைப் பாதுகாக்கும் திறமையுள்ள தலைவர்களை, தெல் அவிவ் பல்கலைக்கழகம் உருவாக்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை. ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்திற்குப் பணியாற்றுவதன் வழியாகவே,  அறிவியலும், கலைகளும் தங்களின் முழு மதிப்பைப் பெறும் என்றும் உரையாற்றிய திருத்தந்தை, அக்குழுவினருக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.