2017-10-21 15:50:00

அருள்பணியாளர்கள் நம்பிக்கையின் அடையாளமாக விளங்குமாறு..


அக்.21,2017. உரோம் நகரிலுள்ள பிரேசில் திருஅவையின், பாப்பிறை பியோ குருத்துவ கல்லூரியின் ஏறத்தாழ நூறு அருள்பணியாளர் மாணவர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரேசில் நாட்டு வரலாற்றில் இன்னல்கள் மிகுந்த இக்காலத்தில், அருள்பணியாளர்கள் நம்பிக்கையின் அடையாளமாக விளங்குமாறு கேட்டுக்கொண்டார். 

அப்பரெசிதா அன்னை மரியா காட்சியளித்ததன் 300ம் ஆண்டை முன்னிட்டு, இந்த அருள்பணியாளர் மாணவர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சந்தித்த திருத்தந்தை, பிரேசில் நாட்டில் இடம்பெறும் சமூகப் பிரச்சனைகள் மற்றும் துர்மாதிரிகை நிறைந்த ஊழலால், நல்லதோர் எதிர்காலத்தின் மீது ஏராளமான குடிமக்கள் நம்பிக்கை இழந்துள்ளதுபோல் தெரிகின்றது என்று கூறினார்.

ஒன்றிணைந்து, உடன்பிறப்பு உணர்வோடு, ஒருமைப்பாட்டுடன் செயல்படும் அருள்பணியாளர்கள் பிரேசில் நாட்டிற்குத் தேவைப்படுகின்றனர் என்றும், இதன் வழியாக, அவர்கள் எதிர்கொள்ளும் தடைகளை ஒன்றுசேர்ந்து சந்திக்க இயலும் என்றும் திருத்தந்தை கூறினார்.

பிரேசில் நாடு தற்போதைய பிரச்சனைகளிலிருந்து மீண்டு வரும் மற்றும், இதில் அருள்பணியாளர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என்பதில், தான் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

புறணி பேசுதல், அருள்பணியாளரின் உடன்பிறப்பு உணர்வை அதிகமாகச் சிதைக்கும் என்றும், புறணி பேசுதல், ஒரு பயங்கரவாதச் செயல் என்றும், புறணி பேசுவதால் ஒரு குண்டு போடப்பட்டு, மற்றவர் அழிக்கப்படுகின்றார் என்றும் திருத்தந்தை எச்சரித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.