2017-10-20 15:39:00

திருத்தந்தை : வெளிவேடத்தனம், பாசாங்கு வாழ்வு நமக்கு நல்லதல்ல


அக்.20,2017. வெளிவேடமாகவும்,தந்திரமாகவும் வாழ்வதைவிடுத்து, மனத்தளவில் உண்மையாய் வாழ்வதற்கு ஆண்டவரிடம் வரம் கேட்போம் என்று, இவ்வெள்ளி காலையில், சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் பங்குகொண்ட விசுவாசிகளிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

கடவுளின் உண்மையான மன்னிப்பு என்றால் என்ன என்பதை விளக்கும், புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலிலுள்ள (உரோ.4:1-8) பகுதி குறித்து, முதலில் தனது மறையுரையில் எடுத்துரைத்த திருத்தந்தை, கடவுளின் மன்னிப்பு எப்போதும் இலவசமாகக் கொடுக்கப்படுவது, இந்த மன்னிப்பை, நாம் ஆற்றும் செயல்களால் பெற இயலாது என்றும் கூறினார்.

கடவுளிடம் நாம் செல்லும் ஒவ்வொரு நேரமும், நம்மை மன்னிக்கின்ற அவரின் இலவசமான அன்புக்கு, நாம் செய்யும் வேலைகள், நமது பதிலாய் உள்ளன என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலை மறையுரையாற்றினார்.

இந்நாளைய திருப்பலியில் வாசிக்கப்பட்ட லூக்கா நற்செய்தி (லூக்.12:1-7) வாசகத்தையும், தன் மறையுரையில் விளக்கிய திருத்தந்தை, நீதியுள்ளவர்களாகவும், புனிதமானவர்களாகவும் தங்களை வெளிப்படுத்துவதற்கு முயற்சிக்கும் இன்னொரு வகை மனிதர்கள் பற்றி, இந்தப் பகுதியில் வாசிக்கின்றோம் என்றும் கூறினார்.

இம்மனிதர்கள், உள்ளத்திலே அழுக்கு நிறைந்தவர்களாகவும், ஆனால், நோன்பிருப்பது, செபிப்பது, தானம் செய்வது ஆகியவற்றை எப்படிச் செய்வது என்பதைக் காட்டுவதன் வழியாக, இவர்கள் வெளியில் தங்களைப் புண்ணியவான்களாகவும், புனிதர்களாகவும் காட்டிக்கொள்ளும் வெளிவேடக்காரர்கள் என்றும் சாடினார், திருத்தந்தை.

எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ அவர் பேறுபெற்றவர் என்று திருப்பாடலில் நாம் செபித்தது போன்று, நம் தூய வாழ்வு கடவுளின் மன்னிப்பை எப்போதும் பெறுவதாகும் என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன், என் தீச்செயலை நான் மறைத்ததில்லை என்று திருப்பாடலில் செபித்து, உண்மையுடன் வாழும் வரத்தை நாம் கேட்டோம், இயேசுவும், உள்ளார்ந்த வாழ்வில் உண்மையுள்ளவர்களாய் வாழுமாறு நம்மிடம் கேட்கின்றார் என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வெளிவேடத்தனமும், பாசாங்கும் நமக்கு நல்லதல்ல என்றும், கடவுளுக்கு நாம் எப்போதும் உண்மையுள்ளவர்களாய் வாழ வேண்டுமென்றும், இதன் வழியாக நாம் பிறரைக் குறைக்கூறக் கற்றுக்கொள்ள மாட்டோம், நம் பாவங்களை ஆண்டவரிடமிருந்து மறைப்பதற்கு முயற்சிக்காமல், நம்மையே நாம் குறைகூறுவோம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறையுரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.