2017-10-19 17:23:00

எண்ணெய்க் கிணறுகளைப் பாதுகாப்பதற்குமுன், மக்களைப் பாதுகாக்க


அக்.19,2017. ஈராக்கில் புதிய ஆயுத மோதல்களின் ஆபத்துக்களிலிருந்து நாட்டைக் காத்துக்கொள்வதற்கு, அரசியல் தலைவர்கள் மத்தியில், ஒருமித்த கருத்து அவை அவசியம் என்றும், எண்ணெய்க் கிணறுகளைப் பாதுகாப்பதற்கு முன், மக்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டுமென்றும், அந்நாட்டு கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

ஈராக் அரசுத்தலைவர் Fuad Masum அவர்களுக்கு விண்ணப்பித்து, அறிக்கை வெளியிட்டுள்ள முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், அரசியல் மட்டத்தில் ஒற்றுமை நிறைந்த ஒரு தலைமைத்துவத்தில், நவீன மற்றும் உறுதியான குடிமக்கள் சமுதாயம் உருவாக்கப்படும் என்று, திருஅவை நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

பொருளாதார, சமூக மற்றும் கலாச்சாரத் துறைகளில் சீர்திருத்தம் கொண்டுவருவதற்குத் திறமையுடைய அரசியல் தலைமை தேவைப்படுகின்றது என்றும், பழிவாங்குதல், சந்தேகம், வெற்றுப்பேச்சுகள் போன்றவற்றை தவிர்த்து, பாக்தாத் மற்றும், எர்பிலுக்கு இடையே நேர்மையான உரையாடல் மீண்டும் தொடங்கப்படுமாறும், அவ்வறிக்கை வலியுறுத்துகின்றது.           

பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு, அனைத்து தரப்புக்களுக்கும் இடையே உண்மையான உரையாடலுக்கும் அழைப்பு விடுத்துள்ளார், முதுபெரும் தந்தை சாக்கோ.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.